‘ஓஜி’ படத்தின் அடுத்த பாகத்தின் திட்டங்கள் என்னவென்று படக்குழுவினர் பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண், இம்ரான் ஹாஸ்மி, அர்ஜுன் தாஸ், பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஓஜி’. இப்படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், வசூலில் 200 கோடியை கடந்திருக்கிறது. இப்படத்தின் மூலம் யுனிவர்ஸ் ஒன்றினை உருவாக்கி இருக்கிறார் சுஜித்.
மேலும், ‘ஓஜி’ படத்தின் 2-ம் பாகம் எப்போது என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக இயக்குநர் சுஜித், ஜப்பானில் பவன் கல்யாண் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதையும், அர்ஜுன் தாஸ் பதவியேற்ற பின்பு தற்போதைய கதையில் என்ன நடந்தது என்பதையும் ஒரே சமயத்தில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இரண்டு படங்களாக உருவாக்கி சில மாத இடைவெளியில் வெளியிடவுள்ளார்கள்.
’ஓஜி’ படத்தின் அடுத்த பாகங்கள் தொடர்பாக இசையமைப்பாளர் தமன், அப்படத்திலிருந்து பல்வேறு பாகங்களை உருவாக்க திட்டம் இருப்பதாக பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் இருவரின் பேட்டியின் மூலம், ’ஓஜி’ படத்தின் பல்வேறு பாகங்கள் வெளியாக வாய்ப்பு இருப்பது தெரிகிறது.
ஆனால், அரசியலுக்கு சென்றபின் பவன் கல்யாண் புதிய படங்கள் எதையுமே ஒப்புக் கொள்ளவில்லை. முன்பு ஒப்புக் கொண்ட படங்கள் அனைத்தையுமே முடித்துக் கொடுத்துவிட்டார். இதனால் ‘ஓஜி’ படத்தின் அடுத்த பாகங்கள் குறித்து பவன் கல்யாண் என்ன முடிவு செய்யவிருக்கிறார் என்பது வரும் நாட்களில் தெரியவரும்.