அக் ஷய் குமார், ஜியா கான், அர்ஜுன் ராம்பால் நடித்து 2010-ல்வெளியான படம், ‘ஹவுஸ்புல்’. காமெடி த்ரில்லர் படமான இது வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகின. இப்போது இதன் 5-வது பாகம் உருவாகியுள்ளது.
இதில் அக்ஷய் குமார், ரிதேஷ் தேஷ்முக், அபிஷேக் பச்சன், ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்பட 24 முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தருண் மன்சுஹானி இயக்கியுள்ளார். வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் இந்தப் படத்தில் 2 கிளைமாக்ஸ் இடம்பெற்றுள்ளது. அதாவது, ஹவுஸ்புல் 5 ஏ, ஹவுஸ்புல் 5 பி என இரண்டாக பிரித்து இந்தப் படத்தை வெளியிடுகின்றனர்.
இரண்டும் வெவ்வேறு தியேட்டர்களில் வெளியாகும். இரண்டு விதமான கிளைமாக்ஸுடன் இரண்டு படமாக பிரித்து, ஒரே நேரத்தில் வெளியிடுவது, இதுதான் முதல் முறை என்கிறார்கள். இதுபற்றி தயாரிப்பாளர் சஜித் நாடியத்வாலா கூறும்போது, “இது புது முயற்சி. பார்வையாளர்கள் இரண்டு பதிப்பையும் பார்க்க வேண்டும் என விரும்புகிறோம்” என்றார்.