“உழைத்தவரும், உழைத்து களைத்தவரும் என்றும் இளைத்தவரும் ஏய்த்து பிழைப்பவரும், படிப்பவரும், கொள்ளை அடிப்பவரும், இங்கு குடிப்பவரும், அன்பில் துடிப்பவரும் எவர் எவராகினும் அவர்க்கொரு துயரம் உயர் இசை கேட்டில் துயர் மனமுருகும், இன்னிசை என்னிசையென” எவர்க்கும் பொதுவென்று அள்ளிக் கொடுப்பவர் இசைஞானி இளையராஜா. அதனால்தான் அதிசயங்களை நிகழ்த்தியப் பிறகும் தொடரும் அவரது தீரா இசை தேடல் இப்போது வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
திரை இசைத் துறையில் பின்னணி பாடகராக விரும்புகின்ற பலருக்கும் இளையராஜாவின் இசையில் ஒரு பாடலையாவது பாடிவிட வேண்டும் என்ற ஆவல் எப்போதும் இருக்கும். விவரிக்க இயலாத இசை ஆற்றலைப் பெற்ற இளையராஜா, பாடலுக்கான இசைக் குறிப்புகள் முழுவதையும் எழுதிய பிறகுதான், அந்தப் பாடலை யார் பாடப் போகிறார்கள் என முடிவு செய்வதாக கூறுகிறார். பிரபலமான தென்னிந்திய பாடகர்கள் துவங்கி, பாலிவுட்டின் பெருமைமிகு குரல்கள் வரை இளையராஜாவின் இசை சுவைத்தவையே. அந்த வகையில், இளையராஜா தன்னுடைய இசையில் பல பாடகர்களைப் பாட வைத்துள்ளார். அதில், சில அரிதான குரல்களையும் அவ்வப்போது பயன்படுத்தியிருப்பார்.
எஸ்பிபி, ஜானகி, ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன், மனோ, சித்ரா, ஜெயச்சந்திரன், ஜென்சி என இவர்களது குரலில் வரும் பாடல்களை நாம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பதாலோ என்னவோ, ராஜாவின் இசையில் மிக குறைவான அல்லது ஒரே ஒரு பாடலை மட்டும் பாடிய அரிதான குரலுக்குச் சொந்தமானவர்களை நாம், மேற்சொன்ன பாடகர்களில் ஒருவர் அல்லது ராஜா இசையில் அவ்வப்போது பாடும் எஸ்.என்.சுரேந்தர், அருண்மொழி, உமா ரமணன் உள்ளிட்ட யாரோ ஒருவரை மனதினுள் நினைத்து அந்தப் பாடல்களைக் கடந்திருப்போம். அப்படி ராஜாவின் இசையில் வந்த அரிதான 10 குரல்களின் தொகுப்பு இது.
பி.பி.ஸ்ரீநிவாஸ் – இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த ‘கடவுள் அமைத்த மேடை’ படத்தில், இளையராஜாவின் இசையில் மறைந்த பழம்பெரும் பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் ‘தென்றலே நீ பேசு’ என்ற பாடலை பாடியிருப்பார். ராஜாவின் இசையில் அவர் இந்த ஒரேயொரு பாடலைத்தான் பாடினார். கல்லையும் கரைத்துவிடும் அவரது குரலும், ராகதேவனின் தபேலாவும் ஒருசேர பயணித்து, இந்தப் பாடல் கேட்பவர்களை உருகவைத்திருக்கும்.
பாலமுரளி கிருஷ்ணா – தேவராஜ் மோகன் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளிவந்த படம் கவிக்குயில். கர்நாடக சங்கீத மேதை பாலமுரளி கிருஷ்ணா, இந்தப் படத்தில் பாடிய ‘சின்ன கண்ணன் அழைக்கிறான்’ என்ற பாடலை பாடியிருப்பார். திரையிசை பாடல்கள் என்றால் கல்யாணி, மோகனம் அல்லது சிந்துபைரவி போன்ற ராகங்களில் தான் இருக்கும் என்ற பொதுவான கருத்தை ராஜா இந்தப் பாட்டில் பொய்யாக்கியதாக கூறுவர். ஆம், ‘ரீதி கௌளை’ என்ற ராகத்தின் அடிப்படையில் இந்தப் பாடலை அமைத்து கர்நாடக இசை ரசிகர்களை கவர்ந்திருந்தார் இளையராஜா.
கிருஷ்ணசந்திரன் – கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘கோழி கூவுது’. இப்போது வரை ரீல்ஸ்களில் வலம்வரும், ‘ஏதோ மோகம்’ பாடலுக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. இந்தப் பாடலை எஸ்.ஜானகியுடன் இணைந்து பாடியவர் கேரளத்தைப் பூர்வீகமாக கொண்ட டி.என்.கிருஷ்ணசந்திரன். நடிகர், பாடகர், பின்னணி குரல் கொடுப்பவர் என பன்முகத் திறமை கொண்ட இவர் இளையராஜாவின் இசையில் இந்தப் பாடல் மட்டுமின்றி இன்னும் சில பாடல்களையும் பாடியிருக்கிறார்.
மஞ்சுளா குருராஜ் – இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வந்த படம் ‘நல்லவனுக்கு நல்லவன்’. இதில் வரும் ‘உன்னைத்தானே தஞ்சமென்று’ பாடலை பலமுறை கேட்டிருப்போம். இந்தப் பாடலில், பாட்டு தொடங்கி முதல் சரணம் முடியும் வரை பெண் குரல்தான் வரும். இரண்டாவது சரணத்தை கே.ஜே.ஜேசுதாஸ் பாடியிருப்பார். ஜானகி அல்லது சுசிலா என்ற கணிப்பில் நாமும் இப்பாடலைக் கடந்து போயிருப்போம். இப்பாடலை பாடியவர் பிரபல கன்னட பின்னணி பாடகி மஞ்சுளா குருராஜ். சுசிலா, ஜானகியின் குரலுக்கும் நமக்குமான இணக்கம், மஞ்சுளா குருராஜின் குரலை நம்மை பிரித்தறிய செய்யாது. அந்தளவுக்குப் பொருத்தமாக பாடியிருப்பார்.
சந்திரசேகரன் – இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் ராஜா இசையில் வெளிவந்த திரைப்படம் ‘ராசாமகன்’. இந்தப் படத்தில் ‘அஞ்சுகெஜம் காஞ்சிப்பட்டு’ பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஜானகி பாடியிருப்பார். இதே படத்தில் இன்னொரு டூயட் பாடல் வரும். ‘காத்திருந்தேன் தனியே’ பாடலை சந்திரசேகர் மற்றும் ஸ்ரீலேகா ஆகியோரை இளையராஜா பாடவைத்திருப்பார். படத்தில் வரும் மிகச் சிறந்த மெலோடியான இந்தப் பாடலை பாடியவர்கள் குறித்து மிக சரியான குறிப்புகள் இல்லை. ஒருசிலர் சந்திரசேகர் மறைந்த மூத்த இசையமைப்பாளர் ஏ.எம்.ராஜாவின் மகன் என்றும், ஒரு சிலர் அவர் இளையராஜாவின் இசைக்குழுவில் இசைக்கருவி இசைப்பவர் என்றும் கூறுகின்றனர். எதுவாகினும், இருவரது குரலிலும் இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் கொட்டும் அருவியாகி மனம் குதுகலிக்கும்.
ஜாலி ஆபிரகாம் – இளையராஜாவின் இசையில் இயக்குநர் ஆர்.ரகு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘கட்டப்பஞ்சாயத்து’. இந்தப் படத்தில் கவிஞர் வாலியின் வரிகளில் வரும் ‘ஒரு சின்ன மணிக்குயிலு’ பாடலை பவதாரணியுடன் இணைந்து பாடியவர் தான் ஜாலி ஆபிரஹாம். மலையாளத்தில் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடிய இவர், தமிழ், தெலுங்குவில் வெகுசில பாடல்களை மட்டுமே பாடியுள்ளார். இந்தப் பாடலில் வரும் அவரது குரல் அருண்மொழியையும், ஜெயச்சந்திரனையும் கலந்து கேட்பது போன்றதொரு உணர்வைத் தந்திருக்கும்.
பாம்பே ஜெயஸ்ரீ – பெயரைப் பார்த்தவுடன் 2001-ல் வந்த ‘வசீகரா’ பாடல்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், 1994-ல் இயக்குநர் சந்தானபாரதியின் இயக்கத்தில் வந்த ‘வியட்நாம் காலனி’ படத்திலேயே பாம்பே ஜெயஸ்ரீ இளையராஜா இசையில் பாடியிருப்பார். அந்தப் படத்தில் வரும் ‘கை வீணையை ஏந்தும் கலைவானியே’ பாடலை அவர் பாடியிருப்பார். கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்ட அந்தப்பாடல் மனதுக்கு அத்தனை ஆறுதலை தரும்.
ப்ரீத்தி உத்தம்சிங் – ‘ராசய்யா’ படத்தில் வரும் ‘காதல் வானிலே’ பலருக்கும் ஆல்டைம் ஃபேவரைட் பாடல்தான். பாடலை எஸ்.பி.பி உடன் இணைந்து பாடியவர் ப்ரீத்தி உத்தம்சிங். இந்தப் படத்தில்தான் ராஜாவின் இசையில் முதன் முதலாக ஒரு தனிப்பாடலை பவதாரணி பாடியிருப்பார். ஆனால், காதல் வானிலே பாடலை பாடிய ப்ரீத்தி உத்தம்சிங் இசையமைப்பாளரும், புரோகிராமருமான உத்தம் சிங்கின் மகள். பாடலின் துவக்கத்தில் வரும் ஹம்மிங் துவங்கி இறுதிவரை ப்ரீத்தியின் குரல் இசை சாரலாய் மனதை நனைத்திருக்கும்.
சுதா ரகுநாதன் – கர்நாடக இசைப் பாடகரான சுதா ரகுநாதன் முதன் முதலாக இளையராஜாவின் இசையில்தான் திரையிசைப் பாடலைப் பாடினார். ‘இவண்’ படத்தில் வரும் ‘என்னை என்ன செய்தாய் வேங்குழலே’ பாடல் உட்பட இரு பாடல்களை அந்தப் படத்தில் பாடியிருப்பார் சுதா ரகுநாதன். இயக்குநர் பார்த்திபன் கர்நாடக சங்கீதத்தில் அமைந்த இந்தப் பாடலை தனது ஹைக்கூ கவிதைகளை இடையிசையாக்கி பாடலைக் கேட்கும்போது ஏற்படும் சுகத்தை பார்க்கும்போது பார்வையாளர்களுக்கு கடத்தியிருப்பார்.
அஜோய் சக்ரபர்தி – ‘ஹேராம்’ படத்தில் வரும் ‘இசையில் தொடங்குதம்மா’ பாடலை பாடிய பண்டிட் அஜோய் சக்ரபர்தி மேற்கு வங்கத்தைப் பூர்வீகமாக கொண்டவர். ரீரெக்கார்டிங்காக படத்தைப் பார்த்த இளையராஜா, இந்தப் பாடலை உருவாக்கி மிக துல்லியமாக படத்தில் சேர்த்திருப்பார். இந்துஸ்தானி கிளாசிக்கல் பாடும் அஜோய் சக்ரபர்தியின் குரலில் ராஜாவின் இசையில் இந்தப் பாடலைக் கேட்கும்போது மெய்மறக்கும் மனதைக் கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல.செனாய், டோலக் என வடஇந்தியாவின் முதன்மையான இசைக்கருவிகளை இசைஞானி இப்பாடலில் அற்புதமாக பயன்படுத்திதியிருப்பார்.
இப்படி திரையுலகில் இளையராஜா செய்திருக்கும் சம்பவங்கள் ஏராளம். கேட்கும் திறன்பெற்ற செவிப்பறைகளின் நிரந்தர சுவரோவியமாகிக் கிடக்கிறது அவரது இசை. கடுக்காயும் சுண்ணாம்பும் குழைத்துக் கட்டிய பழங்காலத்து வீட்டுச் சுவர்களைப் போலத்தான் அவரது பாடல்களும் இசையும் இன்றும் பலரை இறுக்கிப் பற்றியிருக்கிறது. நாள்பட்ட இவ்வகை சுவர்களில் விழும் விரிசல்கள் மண் துகள்களாய் உதிரும். ஆனால், ராஜாவின் இசை மனதுக்குள் உறுதியாய் நிலைத்திருக்கும்.
| இன்று – ஜூன் 2 – இளையராஜா பிறந்தநாள் |