‘ஏகே64’ படத்தின் கதைக்களம் எப்படியிருக்கும் என்பதற்கு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பதிலளித்துள்ளார்.
அவரது இயக்கத்தில் அஜித், பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சிம்ரன், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது.
மீண்டும் அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான முன்தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துக் கொண்டார் ஆதிக் ரவிச்சந்திரன். அவரிடம் அடுத்த அஜித் படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ஆதிக் ரவிச்சந்திரன், “‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டது. ‘ஏகே64’ திரைப்படம் அனைத்து தரப்பு மக்களும், ரசிகர்களும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமாக கதைக்களம் இருக்கும்” என்று பதிலளித்துள்ளார். அஜித்துடன் நடிக்கவிருப்பவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.