மும்பை: ’ராஞ்சனா’ படத்தின் க்ளைமாக்ஸ் ஏஐ மூலம் மாற்றப்பட்டு இருப்பதற்கு நடிகர் தனுஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திப் பட இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம், ‘ராஞ்சனா’. 2013-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார் தனுஷ். ஏ.ஆர்.ரஹ்மான் இசை, நாயகியாக சோனம் கபூர் என பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகி வரவேற்பையும் பெற்றது. தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற பெயரிலும் வெளியானது.
தற்போது இப்படத்தினை அப்ஸ்விங் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் நவீன தொழில் நுட்பத்துடன் வெளியிட்டு இருக்கிறது. இதற்காக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியினை ஏஐ தொழில்நுட்ப உதவியுடம் மாற்றியமைத்திருக்கிறது. இது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது.
அண்மையில் இது குறித்து இயக்குநர் ஆனந்த் எல்.ராய் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், தற்போது நடிகர் தனுஷும் இந்த விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏஐ மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸுடன் ‘ராஞ்சனா’ படம் ரீ-ரிலீஸ் ஆனது எனக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது.
மாற்றப்பட்ட இறுதிக் காட்சி, படத்தின் அசல் ஆன்மாவை சிதைத்து விட்டது. என்னுடைய தெளியான ஆட்சேபனையை தாண்டி படக்குழு இதை செய்திருக்கிறது. 12 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒப்புக் கொண்ட படம் இதுவல்ல. திரைப்படங்களையும், உள்ளடக்கங்களையும் ஏஐ உதவியுடன் மாற்றுவதென்பது கலைக்கும் கலைஞர்களுக்கும் மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.
கதை சொல்லலின் நேர்மையையும் சினிமாவின் மரபையும் இது அச்சுறுத்துகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களை தடுக்கும் விதமாக கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று நம்புகிறேன்” என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.
For the love of cinema pic.twitter.com/VfwxMAdfoM
— Dhanush (@dhanushkraja) August 3, 2025