’எஸ்.டி.ஆர் 49’ படத்தின் இசையமைப்பாளராக அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் ‘எஸ்.டி.ஆர் 49’. முழுக்க வடசென்னை பின்னணியில் இக்கதையினை உருவாக்கி இருக்கிறார் வெற்றிமாறன். தாணு தயாரிக்கவுள்ள இப்படத்தின் ப்ரோமோ அக்டோபர் 4-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் இசையமைப்பாளராக அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
வெற்றிமாறன் படங்களுக்கு இதுவரை அனிருத் இசையமைத்தது இல்லை. முதன்முறையாக வெற்றிமாறன் – அனிருத் கூட்டணி இப்படத்தின் மூலம் உருவாகும் எனத் தெரிகிறது. இந்தக் கூட்டணியை சிம்புவே பேச்சுவார்த்தையின் மூலம் உருவாக்கி இருக்கிறார். சம்பளப் பேச்சுவார்த்தை முடிந்தபின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என தெரிகிறது. மேலும், ப்ரோமோ வீடியோவின் மூலம் அனிருத் தான் இசையமைப்பாளர் என்று அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
இதுமட்டுமன்றி, இப்படத்தினை தாணு மட்டுமன்றி அட்மேன் பிலிம் ஆர்ட்ஸ் நிறுவனமும் தயாரிக்கும் என தெரிகிறது. சிம்புவுடன் நீண்ட மாதங்களாக நடைபெற்ற சம்பளப் பேச்சுவார்த்தையின் முடிவில், இப்படத்திலிருந்து பங்குகளாக சிலவற்றை கொடுக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் தாணு. இதன் மூலமே இப்படம் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்திருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.