திருவள்ளூர்: மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் 79-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தடையை மீறி , தடுப்பு வேலியை தாண்டி சென்று ரசிகர்கள் மலர் மாலை அணிவித்தும், மலர்த் தூவியும் மரியாதை செலுத்தினர்.
மறைந்த திரைப்பட பின்னணி பாடகர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் 79-வது பிறந்த தினமான இன்று (ஜூன் 4) உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள், அவரின் பாடல்களை ரசித்து மகிழ்ந்து கொண்டாடினர். திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், அங்கு மரியாதை செலுத்த ரசிகர்கள் வரவேண்டாம் என அவரது மகன் எஸ்.பி.பி.சரண் கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக அங்கு ரசிகர்களுக்கு அனுமதியில்லை என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த எஸ்பிபி ரசிகர்கள் ஏராளமானோர் இன்று அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த மாலைகள், மலர்கள் உடன் வந்திருந்தனர். நினைவிடத்தில் மரியாதை செலுத்த அனுமதியில்லை என்பதை அறிந்து அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும், சில ரசிகர்கள், நினைவிட பகுதியில் உள்ள தடுப்பு வேலியை தாண்டி குதித்து உள்ளே சென்று அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.