‘எல்.ஐ.கே’ மற்றும் ‘ட்யூட்’ ஆகிய இரண்டு படக்குழுவினருக்கும் இடையே எப்போது வெளியீட்டு பஞ்சாயத்து முடியும் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தயாராகி வரும் படங்கள் ‘எல்.ஐ.கே’ மற்றும் ‘ட்யூட்’. இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதலில் ‘ட்யூட்’ படமே தீபாவளி வெளியீடு என அறிவிக்கப்பட்டது. தற்போது ‘எல்.ஐ.கே’ படமும் தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ‘ட்யூட்’ வெளியீடு டிசம்பருக்கு ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மாலை முக்கிய அறிவிப்பு என்று புதிய போஸ்டர் ஒன்றை ‘ட்யூட்’ படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் மீண்டும் தீபாவளி வெளியீடு என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த தீபாவளி ’ட்யூட் தீபாவளி’ என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிவிப்பின் மூலம் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தீபாவளிக்கு மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன்’ வெளியாகவுள்ளது. இதன் ஓடிடி உரிமையினை ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. அதே வேளையில் ‘ட்யூட்’ படத்தின் ஓடிடி உரிமையினையும் ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனமே கைப்பற்றியுள்ளது. ஆகையால் இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியீடு சாத்தியமில்லை என்பது தெரிகிறது. அது எப்போது அதிகாரபூர்வமாக தெரியவரும் என்பது தான் அனைவருடைய கேள்வியாக இருக்கிறது.