எம்.பி எல்லாம் எனக்கு முக்கியமல்ல. கடைசி வரை விஜயகாந்த் மகன் என்பதே முக்கியம் என்று விஜய பிரபாகரன் பேசினார்.
ஆகஸ்ட் 22-ம் தேதி ‘கேப்டன் பிரபாகரன்’ மறுவெளியீடு செய்யப்படுகிறது. இதன் புதிய ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு திரையுலக பிரபலங்களுடன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும் கலந்துக் கொண்டார். இந்த விழாவில் பேசும்போது கண்ணீர் மல்க பேசினார் விஜய பிரபாகரன்.
இந்த விழாவில், “’கேப்டன் பிரபாகரன்’ பட சமயத்தில் பிறந்ததால் எனக்கு பிரபாகரன் என்று பெயரிட்டதாக பலரும் கூறுவார்கள். எம்.பி எல்லாம் எனக்கு முக்கியமல்ல. கடைசி வரை விஜயகாந்த் மகன் என்பதே முக்கியம். அப்பா இறந்து ஒரு வருடமாகிவிட்டது இன்னும் அழுதுக் கொண்டிருக்கிறான் என்று பலரும் கிண்டல் செய்கிறார்கள். தோல்வியை நினைத்து அழவில்லை, என்னை சூழ்ச்சியில் தோற்கடித்துவிட்டார்கள் என அழவில்லை. எங்கப்பாவை மிஸ் பண்றேன், அழுகிறேன்” என்று பேசினார் விஜய பிரபாகரன்.
ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த், சரத்குமார், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடிப்பில் 1991-ம் ஆண்டு வெளியான படம் ‘கேப்டன் பிரபாகரன்’. விஜயகாந்த் நடிப்பில் வெளியான 100-வது படம், ’கேப்டன்’ என்ற அடைமொழி கிடைத்த படம் என்று பல்வேறு விஷயங்கள் இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியின் மூலம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.