சென்னை: நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரோபோ சங்கர் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலக, அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசன்: ரோபோ சங்கர். ரோபோ புனைப்பெயர் தான். என் அகராதியில் நீ மனிதன். ஆதலால் என் தம்பி. போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ? உன் வேலை நீ போனாய். என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே.
நடிகர் சிலம்பரசன்: நடிகர் ரோபோ சங்கர் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். எப்போதும் சிரிப்பை பரிமாறிய ஒரு மனிதரை இப்படி இழந்துவிடுவது மிகுந்த வேதனை. அவர் மறைவு திரையுலகத்திற்கும், ரசிகர்களின் இதயங்களுக்கும் பெரும் இழப்பு. என்றும் நம்முள் வாழும் அவரின் சிரிப்புகள் நினைவாகவே இருக்கும். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல் அனுதாபங்கள்.
நடிகர் கார்த்தி: காலப்போக்கில் ஏற்படும் அழிவுகரமான தேர்வுகள் ஆரோக்கியத்தை எவ்வாறு சிதைக்கின்றன என்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. ஒரு சிறந்த திறமையாளர் மிக விரைவில் சென்றுவிட்டார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
நடிகை வரலட்சுமி சரத்குமார்: கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் அவரிடம் பேசினேன். இப்போது அவர் இல்லை. அதுவும் திடீரென்று. என்னால் நம்பவே முடியவில்லை. அவரது குடும்பத்தினருக்கு பிரார்த்தனைகள். அவர் பலரை சிரிக்க வைத்தவர். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: நடிகர் ரோபோ சங்கர் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை திறனால், பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவலையில் இருந்து மீட்டவர். இவரது மறைவு, திரையுலகிற்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: சின்னத் திரையிலிருந்து வளர்ந்து, தமிழ்ச் சினிமாவில் தனது தனித்துவமிக்க நகைச்சுவை திறன் மூலமாகவும், குணச்சித்திர வேடங்களின் மூலமாகவும் புகழ்பெற்ற நடிகராகத் திகழ்ந்த நடிகர் ‘ரோபோ’ சங்கர் மறைவுச் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்த இக்கட்டான சூழலில் வாடுகின்ற அவரது குடும்பத்தார் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: தனது நகைச்சுவைத் திறனால், தமிழக மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் இடம்பிடித்த திரைக் கலைஞர், ரோபோ சங்கர் இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. ரோபோ சங்கர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
பாமக தலைவர் அன்புமணி: திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையில் நகைச்சுவைக் கலைஞராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து அனைத்துத் தரப்பினராலும் ரசிக்கப்பட்ட ரோபோ சங்கர் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன். சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ரோபோ சங்கர் பங்கேற்கத் தொடங்கிய நாளில் இருந்தே அவரது நிகழ்ச்சிகளை தொடர்ந்து கண்டு ரசித்து வந்திருக்கிறேன். மன அழுத்தத்தாலும், சோதனைகளாலும் இறுக்கமாக இருந்த காலங்களில் என்னை அவரது நகைச்சுவைகளின் மூலம் கவலைகளை மறந்து சிரிக்க வைத்தவர் சங்கர். திரைத்துறையில் ஏராளமான சாதனைகளை படைத்திருக்க வேண்டிய ரோபோ சங்கர் இளம் வயதில் நம்மை விட்டு பிரிந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.