‘கைதி 2’ கதைக்களம் குறித்தும், எப்போது தொடங்கும் என்பது குறித்தும் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் விவரித்துள்ளார்.
‘கூலி’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக அளித்த பேட்டியில் ‘கைதி 2’ குறித்து பேசியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதில் “‘கைதி’ தொடங்கும்போது, அதன் தொடர்ச்சியாக படங்கள், எல்.சி.யூ போன்ற எந்தவொரு எண்ணமும் இல்லை. அனைத்துமே மக்கள் கொடுத்ததுதான். அந்தப் படமே ஒரு முடிவே இல்லாமல்தான் இருக்கும். 10 ஆண்டுகளுக்கு முன்பு டில்லி என்ன செய்துக் கொண்டிருந்தார் என்பதை ஒரு ஐடியா எழுதி பின்பு விட்டுவிட்டோம்.
‘விக்ரம்’, ‘லியோ’ என எல்.சி.யூ படங்கள் வந்த பிறகு, ‘கைதி 2’ என்பது பல கதாபாத்திரங்கள் அடங்கியதாக இருக்கிறது. ஆகையால் ‘கைதி 2’ ஒரு நல்ல கதையாக அமைந்திருக்கிறது. அதன் கதையாக 30-35 பக்கங்கள் எழுதி இருக்கிறேன். ‘கூலி’ வெளியானவுடன் நல்ல நாள் பார்த்து அதனை ஆரம்பிக்க வேண்டும். எல்.சி.யூ படங்களில் என்னால் அனைத்து கதாபாத்திரங்களையும் ஏதோ ஒரு வகையில் கதையில் கொண்டுவர முடியும்.
புதிய கதையில் 20 நிமிடத்துக்குள் அனைத்து முக்கிய கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்த வேண்டும். இப்போது எல்.சி.யூ-வில் அனைத்து கதாபாத்திரங்களுமே மக்களுக்கு பரிச்சயமானவை. ஆகையால், அவற்றை அறிமுகப்படுத்தும்போது அவர் யார் என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.