’மிஷன் இம்பாசிபிள் 8’ படத்தின் லண்டன் ப்ரீமியரின் போது நடிகையும் சமூக வலைதள இன்ஃப்ளூயன்ஸருமான நிஹாரிகா டாம் க்ரூஸ் உடன் உரையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான ‘மிஷன் இம்பாசிபிள்: ஃபைனல் ரெகனிங்’ நாளை (மே 17) வெளியாகிறது. இதற்காக படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு கடந்த சில நாட்களாகவே ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் ப்ரீமியர் காட்சி லண்டனில் உள்ள லெய்செஸ்டர் ஸ்கொயர் கார்டன்ஸ் அரங்கில் நடைபெற்றது. இதில் உலகம் முழுவதுமுள்ள பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியாவிலிருந்து நடிகையும் சமூக வலைதள இன்ஃப்ளூயன்ஸருமான நிஹாரிகா கலந்து கொண்டார். மேலும் நடிகர் டாம் க்ரூஸுடன் உரையாடும் ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் பதிவிட்டுள்ள அவர், “இந்த மிஷன் சாத்தியமானது என்னுடைய ஆன்மாவை உற்சாகப்படுத்துகிறது. இதை ரீபூட் செய்ய இந்த நூற்றாண்டு எடுக்கும். உங்களை பார்த்து வியந்து போனேன் டாம் க்ரூஸ். நான் கனவு காணத் துணிச்சல் இல்லாத இந்தக் கனவை நனவாக்கியதற்கு நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
ஹாலிவுட் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த படங்களின் பட்டியலில் ‘மிஷன்: இம்பாசிபிள்’ சீரிஸ் படங்கள் எப்போதும் உண்டு. ஆக்ஷன் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்தப் படத்தின் முந்தைய பாகங்கள் ஹாலிவுட்டில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளன. அந்த வகையில் இந்தப் படத்தில் 7-ம் பாகமாக ‘மிஷன்: இம்பாசிபிள்- டெட் ரெகனிங் (பாகம் 1)’ கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி வெளியாகி வசூலை குவித்தது. முந்தைய பாகத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்யூரி இந்தப் பாகத்தையும் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் முந்தைய பாகங்களின் வரவேற்பை கணக்கில் கொண்டு இப்படத்தை முன்கூட்டியே இங்கு வெளியிடுகிறது பாரமவுன்ட் நிறுவனம். உலகம் முழுவதும் இப்படம் மே 23-ஆம் தேதி வெளியாகும் நிலையில், இந்தியாவில் நாளையே (மே 17) இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ‘மிஷன் இம்பாசிபிள்’ பட ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்தியாவில் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.