தன்னை மலையாளத்தில் கவனம் செலுத்துமாறும் சொன்னவர் கமல்ஹாசன் தான் என்று நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் ‘உள்ளொழுக்கு’ (Ullozhukku) படத்தில் நடித்ததற்காக சிறந்த உறுதுணை நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார் ஊர்வசி. அதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டி பெரும் வைரலாகி வருகிறது. அதில் தேசிய விருது தேர்வு, ஷாரூக்கானுக்கு ஏன் விருது உள்ளிட்டவை குறித்து பல கேள்விகள் எழுப்பி இருந்தார்.
தற்போது தமிழில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், கமல்ஹாசன் தான் தன்னை மலையாளத்தில் நடிக்குமாறு கூறியதாக குறிப்பிட்டுள்ளார். அந்தப் பேட்டியில் ஊர்வசி, “மரியாதைக்குரிய நண்பர் கமல். அப்படியொரு நட்பு கிடைப்பது சினிமாவில் பெரிய விஷயம். திறமைக்கு மதிப்புக் கொடுப்பவர் அவர். ஊர்வசி ஒரு கணிக்க முடியாத திறமையான நடிகை என்று சொன்னதால் மட்டுமே தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட்டேன். அதுதான் உண்மை.
தமிழில் சில படங்களில் நடித்தவுடன், என்னை மலையாள திரையுலகுக்கு போகச் சொன்னது கமல் தான். காதல் காட்சிகள், நெருக்கமான காட்சிகள் எல்லாம் உங்களுக்கு பிடிப்பதில்லை. நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறீர்கள். உங்களுக்கு தமிழ் செட்டாகாது. நீங்கள் மலையாளத்துக்குச் செல்லுங்கள். நல்ல கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கலாம் என்றார் கமல். பின்புதான் மலையாளத்தில் கவனம் செலுத்த தொடங்கினேன்” என்று தெரிவித்துள்ளார் ஊர்வசி.