சென்னை: “என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது” என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது.
அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் ராஜேஷ்: தமிழ்த் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார். அவருக்கு வயது 75. குறைந்த ரத்த அழுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பினால் அவர் உயிரிழந்தார்.
இயக்குநர் கே.பாலச்சந்தரின், ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகர் ராஜேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். ராஜேஷ் ஒரு சிறந்த டப்பிங் கலைஞரும் கூட. ‘டும் டும் டும்’, ‘மஜா’, ‘உள்ளம் கேட்குமே’ உள்ளிட்ட படங்களில் பின்னணிக் குரல் கொடுத்தவர். ‘பொய் சொல்லப் போறோம்’ படத்தில் நெடுமுடி வேணுவுக்கு குரல் கொடுத்தவர்.