எனக்குள் இருக்கும் குழந்தைத்தனம் இன்னும் போகவில்லை என்று ‘மிராய்’ பத்திரிகையாளர் சந்திப்பில் தேஜா சஜ்ஜா தெரிவித்தார்.
கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிராய்’. பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் செப்டம்பர் 12-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தினை விளம்பரப்படுத்த சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டது படக்குழு. தமிழகத்தில் ‘மிராய்’ படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.
இச்சந்திப்பில் தேஜா சஜ்ஜா பேசும் போது, “ஆக்ஷன், அட்வெஞ்சர், ஃபேண்டசி, எமோஷன் மற்றும் டிவோஷன் நிறைந்த படம் தான் ’மிராய்’. ஒரு வருடத்தில் சில படங்களே திரையரங்கில் பார்க்கும் படியாக வெளியாகின்றன. அந்த வரிசையில் ’மிராய்’ படமும் இருக்கும். 3 வயது முதல் 80 வயது வரை உள்ள அனைவரும் இப்படத்தை ரசிப்பார்கள். இயக்குநர் கார்த்திக் கட்டம்னேனியால் தான் இது சாத்தியமானது. அவருடைய திரைக்கதை தான் இப்படத்தை சிறப்பித்துள்ளது. தமிழகத்தில் இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிடுவதில் மகிழ்ச்சி.
மிராய் என்றால் எதிர்காலத்தின் நம்பிக்கை என்று அர்த்தம். படத்தில் இன்னொரு அர்த்தம் உள்ளது, அது ஒரு ட்விஸ்ட் மூலம் தெரியவரும். மேலும், இப்படத்தை சீன மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் தயாரித்துள்ளோம். காரணம் சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இந்திய படங்களுக்கு மார்க்கெட் அதிகம் உள்ளது. இதற்கு முன் வெளியான ’ஹனுமன்’ திரைப்படமும் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வெளியானது.
நான் தொடர்ந்து ஃபேண்டசி படங்களை நடிப்பதன் காரணம், எனக்குள் இருக்கும் குழந்தைத்தனம் இன்னும் போகவில்லை. எனக்கு ஃபேண்டசி படங்கள் பார்க்க பிடிக்கும். அதுமட்டுமின்றி இந்தப் படத்தில் நடப்பவைகள் நிஜத்தில் நடக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. அது நிஜத்தில் சாத்தியமில்லாததால் சினிமாவில் அதைச் செய்ய விரும்புகிறேன்.
இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் பெரும் சவாலாக இருந்தது. இந்தியத் திரைப்படங்களின் தரம் சர்வதேச தரத்திற்கு உயர வேண்டும் என்பதற்காக அனைத்து வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ’ஹனுமன்’ படம் உலக அளவில் பெரும் வெற்றியை பெற்றது, மக்களின் ஆதரவும் கிடைத்தது. அதனால் ’மிராய்’ படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க மிகப் பெரிய அளவில் முயற்சி செய்துள்ளோம்.
இப்படத்தில் நாங்கள் வழக்கமான சண்டைக் காட்சிகள் இல்லாமல், அதிவேக சண்டைக் காட்சிகளை அமைக்க முயற்சித்துள்ளோம். அதற்காக, கட்சா மாஸ்டர் மற்றும் நங் மாஸ்டரை தாய்லாந்திலிருந்து வரவைத்தோம். அதுமட்டுமின்றி, நான் தாய்லாந்து மற்றும் பாங்காக் நகரங்களுக்கு சென்று 20 நாட்கள் பயிற்சி மேற்கொண்டேன். இப்படத்தில் நீங்கள் காணும் அனைத்து சண்டைக் காட்சிகளிலும் டூப் இல்லாமல் நேரடியாக நடித்துள்ளேன்.
இப்படம் சர்வதேச அளவிற்கு இருக்க வேண்டும் என்பதற்காக என்பதற்காக, இமாலயா, இலங்கை போன்ற பல இடங்களுக்கு சென்று சண்டைக் காட்சிகளை படமாக்கியுள்ளோம்” என்று பேசினார் தேஜா சஜ்ஜா.