சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘மெட்ராஸ் மேட்னி’. கார்த்தி கேயன் மணி இயக்கியுள்ள இதை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஆனந்த் ஜி.கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு கே.சி.பாலசாரங்கன் இசையமைத்துள்ளார். ஜூன் 6-ம் தேதி, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்தப் படத்தை வெளியிடுகிறது.
இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது, “மொத்த இந்திய சினிமாவும் இன்று முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறது. சினிமாவின் மார்க்கெட் முழுவதும் மாறியிருக்கிறது. கடந்த ஒரு வருடமாக என்ன படம் செய்வது என்பதில் எல்லோரிடமும் குழப்பம் இருக்கிறது. ஆனால் மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கிறார்கள். நல்ல படங்களுக்கு ஆதரவு தருகிறார்கள்.
ஒரு படம் ஆரம்பிக்கும்போது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான விஷயத்துடன் வந்து ‘பாசிட்டிவா’கத்தான் ஆரம்பிக்கிறோம். ஆனால் எல்லா படங்களும் அப்படி முழுமை பெறுவது இல்லை. அப்படி அமைந்த படமாக ‘மெட்ராஸ் மேட்னி’யை பார்க்கிறேன். சின்ன படம் பெரிய படம் என்று நாம் வகைப்படுத்திக் கொண்டே இருக்கிறோம். பெரும்பான்மையாக இருக்கக் கூடிய மிடில் கிளாஸ் வாழ்க்கையை, எதார்த்தமாக அதே நேரத்தில் ரசிக்கும்படியாக இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறார்கள்” என்றார். படக்குழுவினர் கலந்துகொண்டனர்.