கொச்சி: எதை கொடுத்தாலும் அமைதியாக வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கக் கூடாது என தேசிய விருதுக் குழுவுக்கு நடிகை ஊர்வசி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை சார்பில் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த துணை நடிகராக எம்.எஸ். பாஸ்கர் (பார்க்கிங்), சிறந்த இசைக்கான விருது ஜி.வி.பிரகாஷ் குமார் (வாத்தி), சிறந்த கதை வசனத்துக்கான விருது ராம் குமார் பாலகிருஷ்ணன் (பார்க்கிங்) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. சிறந்த தமிழ் படமாக பார்க்கிங் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
மலையாளத்தில் வெளியான ‘ஆடுஜீவிதம்’ படத்துக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படத்துக்கு விருது எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதே நேரம் ‘உள்ளொழுக்கு’ படத்துக்காக சிறந்த துணை நடிகை விருது நடிகை ஊர்வசிக்கு அறிவிக்கப்பட்டது. ‘பூக்காலம்’ படத்தில் நடித்த விஜயராகவனுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
தனக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறித்து சமீபத்தில் வெளியான பேட்டி ஒன்றில் ஊர்வசி கூறியிருப்பதாவது: “அவர்களால் எப்படி ‘ஆடுஜீவிதம்’ படத்தை புறக்கணிக்க முடிந்தது? நஜீபின் வாழ்க்கையையும், அவரது துயரங்களையும் வெளிப்படுத்த, நேரத்தையும் உழைப்பையும் கொட்டி, உடல் ரீதியான மாற்றத்தை ஒரு நடிகர் (ப்ரித்விராஜ்) அனுபவித்திருக்கிறார். இந்த புறக்கணிப்புக்கு ‘எம்புரான்’ படம்தான் காரணம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். விருதுகள் அரசியலாக மாறக் கூடாது.
துணை கதாபாத்திரங்களுக்கான விருதுக்கு பிரதான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தால், உண்மையான துணை நடிகர்களுக்கு என்ன நடக்கும்? அவர்கள் தங்கள் திறமையை மேம்படுத்த முயற்சிப்பதற்கான உந்துதல் எங்கே? முன்னணி வேடமா அல்லது துணை வேடமா என்பதை தீர்மானிக்க நடிப்பை எவ்வாறு அளந்தார்கள்? 2005-ல் வெளியான ‘அச்சுவிண்டே அம்மா’ படத்துக்காகவும் ‘சிறந்த துணை நடிகை எனக்கு வழங்கப்பட்டது.
அப்போது நான் அதற்கு எதிராக குரல் எழுப்பவில்லை. காரணம் ‘பர்சானியா’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது சரிகாவுக்கு வழங்கப்பட்டது. தனிப்பட்ட வாழ்க்கையில் கடும் போராட்டத்திற்குப் பிறகு அவர் மீண்டும் திரைக்கு வருகிறார் என்பதால், அப்போது எதிர்ப்பு தெரிவிப்பது சரியாக இருக்காது என்று கருதினேன். ஆனால் இந்த முறை, நான் எனக்காக மட்டுமல்ல, என் இளைய சக நடிகர்களுக்காகவும் பேச வேண்டும்.
தெற்கில் திறமையான நடிகர்கள் பலர் இருக்கிறார்கள், இப்போது நாம் குரல் கொடுக்காவிட்டால், அவர்களுக்கு இந்த அங்கீகாரங்கள் தொடர்ந்து கிடைக்காமல் போய்விடும். தேசிய விருதுகள் திறமைக்காக மட்டுமே வழங்கப்பட வேண்டும். வேறு எதற்கும் அல்ல. எனக்கு விருதுகள் மீது ஆசை இல்லை. ஆனால் அவை கிடைக்கும்போது அவை உங்களை மகிழ்ச்சியாக உணர வைக்க வேண்டும். இப்படி அல்ல. நடுவர் குழு தெற்கை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது. எதை கொடுத்தாலும் அமைதியாக வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் நினைக்கக் கூடாது.
நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்து இல்லை. நான் வரி செலுத்துகிறேன். எனக்கு எந்த பயமும் இல்லை. நான் இதை கேள்வி கேட்பது எனக்காக அல்ல, எனக்கு பின்னால் வருபவர்களுக்காக. ‘ஊர்வசி கூட அமைதியாக இருந்தார், நீங்கள் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்’ என்று எதிர்காலத்தில் யாரும் அவர்களிடம் சொல்வதை நான் விரும்பவில்லை. இங்கே கல்வி அதிகம், தன்னம்பிக்கை அதிகம். அதனால்தான், நாங்கள் கேள்வி கேட்கிறோம். ஆம், பின்விளைவுகள் இருக்கும், ஆனால் அது பரவாயில்லை. யாராவது பூனைக்கு மணி கட்டித்தான் ஆக வேண்டும்” இவ்வாறு ஊர்வசி தெரிவித்தார்.