லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படத்துக்கு குவியும் எதிர்மறை விமர்சனங்கள் தொடர்பாக திருப்பூர் சுப்பிரமணியம் காட்டமாக பதிலளித்துள்ளார்.
ஆகஸ்ட் 14-ம் தேதி பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான படம் ‘கூலி’. இப்படத்துக்கு கடும் எதிர்மறை விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இதனைத் தாண்டி அனைத்து மாநிலங்களிலும் நல்லபடியாக படம் வசூல் செய்து வருகிறது. இதனால், படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதனிடையே, எதிர்மறை விமர்சனங்கள் தொடர்பாக காட்டமாக பதிலளித்துள்ளார் திருப்பூர் சுப்பிரமணியம்.
இது தொடர்பாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறும்போது, “எதிர்மறை விமர்சனம் சொன்னால் நமக்கு விளம்பரம் கிடைக்கும் என்று பல பேர் சமூக வலைதளத்தில் இருக்கிறார்கள். இதே வேலையாகவும் சுற்றுகிறார்கள். விமர்சனம் செய்கிறவர்களும் இதைத்தான் செய்கிறார்கள். ஆனால், இதை எல்லாம் மக்கள் எடுத்துக் கொள்வது இல்லை.
‘கூலி’ படத்துக்கு அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. அனைத்து திரையரங்குகளிலும் ‘கூலி’ நல்லபடியாக ஓடிக் கொண்டிருக்கிறது. நாங்கள் அனைவரும் பெரிய வசூல் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், செளபின் சாகீர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.