ஊர்வசி – ஜோஜு ஜார்ஜ் இணைந்து நடிக்கும் ‘ஆஷா’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்கள். ‘ஆஷா’ என்று பெயரிடப்பட்டுள்ள இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதன் பூஜை திருகக்கரையில் உள்ள வாமன மூர்த்தி கோயிலில் நடைபெற்றது. பூஜையைத் தொடர்ந்து, படக்குழு படப்பிடிப்பை தொடங்கியுள்ளது.
இந்த விழாவில், ஜோஜு ஜார்ஜ் உடன் ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் மற்றும் இயக்குநர் சஃபர் சனல் விளக்கேற்றி படத்தை துவக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து படத்தின் ஜோஜு ஜார்ஜ் கிளாப் அடிக்க, மது நீலகண்டன் கேமரா ஸ்விட்ச் ஆன் செய்து படப்பிடிப்பை துவக்கி வைத்தனர்.
இப்படத்தில் ஊர்வசி, ஜோஜு ஜார்ஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, விஜயராகவன், ஐஸ்வர்யா லட்சுமி, மற்றும் ‘பனி’ திரைப்படத்தில் நடித்த ரமேஷ் கிரிஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை ஐந்து மொழிகளில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
‘ஆஷா’ படத்தை அஜித் வினாயகா ஃபிலிம்ஸ் சார்பில் வினாயகா அஜித் தயாரிக்கிறார். இதன் கதையை எழுதியுள்ள சஃபர் சனல் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். திரைக்கதை மற்றும் வசனங்களை ஜோஜு ஜார்ஜ், ரமேஷ் கிரிஜா, மற்றும் சஃபர் சனல் இணைந்து எழுதியுள்ளனர்.