மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்குஎதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க, நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு கமிட்டியை கேரள அரசு அமைத்தது. இந்த கமிட்டி தனது அறிக்கையை கேரள முதல்வரிடம் சமர்ப்பித்தது. கடந்த வருடம் ஹேமா கமிட்டியின் ஒரு பகுதி வெளியாகிப் பரபரப்பானது. அதன்பின்னர் சில நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சில நடிகைகள் வெளிப்படையாகக் கூறினர். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஹேமா கமிட்டி அறிக்கையுடன் தொடர்புடைய வழக்குகளை மூட கேரள போலீஸார் முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் வெளியானது. இதைக் கேலி செய்து நடிகை பார்வதி திருவோத்து அரசுக்கு கேள்வி எழுப்பினார்.
முதல்வர் பினராயி விஜயனை டேக் செய்த அவர், “ஹேமா கமிட்டிஅமைக்கப் பட்டு ஐந்தரை ஆண்டுஆகிறது. ஏதாவது முடிவு எடுக்கப்பட்டுள்ளதா? என்று கிண்டலாக கேட்டிருந்தார். அவருக்கு பதிலளித்துள்ள இயக்குநர் விது வின்சென்ட் நீண்டபதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “படப்பிடிப்புகளில் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பார்வதி உள்பட சில நடிகைகள் ஹேமா கமிட்டியிடம் வாக்குமூலம் கொடுத்திருந்தாலும் அவர்களில் யாரும் பின்னர் போலீஸ் விசாரணையை தொடர தயாராக இல்லை. சினிமாவில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றன. அரசு அதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. விமர்சனங்கள் நல்லதுதான். ஆனால், உண்மைகளைப் புரிந்து கொள்ளாமல் தீர்ப்புகளை வழங்காதீர்கள்” என்று கூறியுள்ளார்.