உங்கள் மீதான வியப்பு ஒரு நொடியும் குறையாமல் இருக்கிறது என்று ரஜினிக்கு இயக்குநர் ஷங்கர் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
ரஜினி – ஷங்கர் கூட்டணி இணைந்து ‘சிவாஜி’, ‘எந்திரன்’ மற்றும் ‘2.0’ ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ளது. இவை அனைத்துமே பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரவேற்பைப் பெற்றவை ஆகும். இன்று திரையுலகில் ரஜினி அறிமுகமாகி 50 ஆண்டுகளை கடந்துள்ளார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ள பதிவில், “அன்பிற்கினிய ரஜினி சார், ‘மூன்று முடிச்சு’ படத்தில் முதன்முதலாக உங்களை திரையில் பார்த்த நாளில் தோன்றிய அந்த பக்தியும், ‘ஜானி’ படத்தின் படப்பிடிப்பில் நேரில் பார்த்த அதிர்வும், இயக்குநராக உங்களை சந்தித்து என் கதைகளை சொல்லிய தருணங்களும், ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘2.0’ ஆகிய படங்களை ஒருங்கிணைத்த அனுபவங்களும், இரு வாரங்களுக்கு முன் கடைசியாக உங்களை பார்த்த தருணமும், கடந்த 50 ஆண்டுகளாக உங்கள் மீது எனக்கிருக்கும் வியப்பு ஒரு நொடியும் குறையாமல் தொடர்கிறது.
எந்த ஒருவரின் நேர்மறை சிந்தனையும் 50 அடி தூரத்தில் பரவும் என்பார்கள். ஆனால் உங்களுடைய நேர்மறை சிந்தனை இந்த உலகையே சூழ்ந்துள்ளது சார். உங்கள் வாழ்க்கையே ஒரு பாடமாகும். பண்புடன் வாழ்வது, அடக்கம், மரியாதை, நேர்த்தி, நேரம் கடைபிடித்தல், கடின உழைப்பு, விடாமுயற்சி எல்லாமே ஒரு புத்தகம் ஆக்கலாம். ஒரு பொன் விழா இதுவரை இவ்வளவு பிரகாசமாக மின்னியதில்லை. ‘கூலி’ மற்றும் அந்த அணியின் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். அரங்கம் அதிரட்டும்” என்று தெரிவித்துள்ளார்.