இரண்டு பாகமாக ‘எஸ்டிஆர் 49’ இருக்கும் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் இருக்கிறது. ஆனால், இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. தாணு தயாரிக்கவுள்ள இப்படம் இரண்டு பாகமாக உருவாகும் என்று பேட்டியொன்றில் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
‘எஸ்டிஆர் 49’ தொடர்பாக வெற்றிமாறன், “இதன் கதையாக 1 மணி நேரம் 15 நிமிடங்கள் வரை எழுதியிருக்கிறேன். இன்னும் ஒரு எபிசோட்டே முடியவில்லை. படத்தில் மொத்தம் 5 எபிசோட்கள் இருக்கின்றன. என்ன செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை” என்று கூறினார். உடனே “அப்படியென்றால் இரண்டு பாகங்களாக வருமா?” என்ற கேள்விக்கு ‘ஆம்’ என்று பதிலளித்துள்ளார் வெற்றிமாறன். இந்த வீடியோ பதிவினை சிம்புவின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
‘எஸ்டிஆர் 49’ படத்தை முடித்துவிட்டு, தனுஷ் நடிக்கும் ‘வடசென்னை 2’ படத்தை தொடங்கவுள்ளார் வெற்றிமாறன். இதனை வேல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தனுஷும் தயாரிக்கவுள்ளார். சிம்பு – தனுஷ் இருவருடைய படங்களுமே வடசென்னையை மையமாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.