சினிமா தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் புராண மற்றும் பக்திக் கதைகளே அதிகம் படமாக்கப்பட்டன. அந்தப் படங்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அதுபோன்ற படங்கள் அதிகமாக உருவாகின. அதில் மகாபாரதத்தின் கிளைக் கதைகளில் ஒன்றை எடுத்து உருவான படம், ‘கிராதா அர்ஜுனா’. இந்தப் படத்துக்கு ‘ஊர்வசி சாகசம்’ என்று இன்னொரு தலைப்பையும் வைத்தனர். இரண்டு தலைப்புகளுடன் வெளியான படம் இது. அந்த காலகட்டத்தில் சில படங்கள் இரண்டு தலைப்புகளுடன் வெளியாகி இருக்கின்றன.
அர்ச்சுனன் தன்மீது வைத்திருக்கும் பக்தியை, பார்வதி தேவிக்கு உணர்த்த விரும்பிய சிவன், அர்ச்சுனன் வேட்டையாடிக் கொண்டிருந்த போது, கிராதா என்ற வேடனாக அங்கு செல்கிறார். அப்போது காட்டுப் பன்றி ஒன்று அர்ச்சுனனை நோக்கிப் பாய்ந்து வருவதைக் கண்ட வில் வீரரான அவர், அதை நோக்கி ஓர் அம்பு எய்கிறார். கிராதாவும் அம்பு எய்ய, காட்டுப் பன்றி இறக்கிறது. காட்டுப்பன்றி உருவத்தில் வந்தது, மூகாசுரன் என்ற அசுரன். காட்டுப்பன்றி இறந்ததும் அசுரன் தன் சுய உருவத்தைப் பெறுகிறான். இதற்கிடையே பன்றியைக் கொன்றது யார் என கிராதாவுக்கும் அர்ச்சுனனுக்கும் மோதல் ஏற்படுகிறது. இறுதியில் கிராதா வெற்றி பெறுகிறார்.
அர்ச்சுனன் அங்கிருந்த சேற்றில் சிவலிங்கம் செய்து அதற்கு மலர்களால் வழிபாடு செய்கிறார். சிவ லிங்கத்தின் மீது அவர் சொரிந்த பூக்கள் கிராதாவின் தலையில் வீழ்வதைக் கண்டு ஆச்சரியப்படுகிறார். கிராதா உண்மையில் சிவன் தான் என்பதை அர்ச்சுனன் உணர்ந்து அவரைப் பணிகிறார். அவரது பக்தியை மெச்சும் சிவபெருமான், அவர் வேண்டிய பாசுபதாஸ்திரத்தை கொடுப்பது கதை.
ஜி.ராமசேஷன், முருகதாசா இணைந்து இயக்கிய படம் இது. பிரபல கர்னாடக இசைக் கலைஞரும், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரின் தம்பியுமான எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி, அர்ச்சுனனாக நடித்தார். சிறந்த பாடகர் மற்றும் நடிகர் இவர். சினிமாவுக்கு வருவதற்கு முன் நாடகங்களில் நடித்து வந்தார். இதற்கு முன் பாமா விஜயம் (1934) படத்தில் கிருஷ்ணராக நடித்திருந்தார்.
‘கிராதா அர்ஜுனா’ படத்தில் நாரதராக நடித்த கர்னாடக இசை வித்துவான் பவானி கே. சாம்பமூர்த்தி, படத்துக்கு இசை அமைத்திருந்தார். சிவபெருமானாக டி.எம்.ராமசாமி பிள்ளை, பிரம்மாதமாக நடித்திருந்தார். அர்ஜுனனை தவத்தில் இருந்து விலக்க, இந்திரனால் அனுப்பப்பட்ட நடன மங்கை ஊர்வாசியாக, திருக்கரைவாசல் சுப்புலட்சுமி நடித்தார். பி.பி.ரங்காச்சாரி, எம்.வி.சுலோச்சனா, எம்.எஸ்.மணி, டி.வி.லட்சுமி என பலர் நடித்தனர்.
வீனஸ் பிக்சர்ஸ் (இது, ஸ்ரீதரின் வீனஸ் பிக்சர்ஸ் அல்ல) தயாரித்த இந்தப் படத்துக்கு பாபநாசம் சிவன் பாடல்கள் எழுதினார். ஜி.சிங், தேவ்ஜி ஒளிப்பதிவு செய்தனர். 1939-ம் ஆண்டில் தணிக்கை செய்யப்பட்டாலும் சில காரணங்களால் 1940-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படம் நன்றாக ஓடியது. ஆனால், இந்தப் படத்தின் பிரின்ட் இப்போது இல்லை என்பது சோகம்.