இன்று சினிமாவை அழிப்பது சுயநலம் தான் என்று ‘இரவின் விழிகள்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேசினார்.
மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் உருவாகியுள்ள படம் ‘இரவின் விழிகள்’. சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளர் மகேந்திரா, சிக்கல் ராஜேஷ், நீமா ரே, நிழல்கள் ரவி, அஸ்மிதா, கும்தாஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, மு.களஞ்சியம், போஸ் வெங்கட், நடிகை நமீதாவின் கணவர் வீரா, நடிகை கோமல் சர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் இயக்குநர் பேரரசு பேசும் போது, “இங்கே அதிமுக, திமுக, நாம் தமிழர், பாஜக என பல கட்சிகளை சேர்ந்தவர்கள் பேச வந்திருக்கிறோம். இயக்குநர் சிக்கல் ராஜேஷ் என்னைப்போல ஊர் பாசம் கொண்டவர். அதனால் தான் தன்னுடைய ஊர் பெயரையும் சேர்த்து வைத்துக் கொண்டார். பெண்கள் ஆண்களுக்கு நிகராக வந்து விட்டார்கள், புரட்சிப் பெண் என்றெல்லாம் சொல்கிறோம். ஆனால் இன்று அவர்களை விட மிக மோசமான நிலையில் வேறு யாருமில்லை. அது குறித்த விழிப்புணர்வை இந்த படம் சொல்ல வருகிறது. இன்று படம் எடுப்பது பெரிய விஷயமில்லை. அதை ரிலீஸ் செய்வது தான் கஷ்டமாக இருக்கிறது.
இன்றைக்கு சினிமாவில் உள்ள மிகப்பெரிய இடர்ப்பாடு இதுதான். திரைப்படத்தை ரிலீஸ் செய்வது தான் முதல் வெற்றியாக இருக்கிறது. அன்று இந்த சினிமா நன்றாக இருக்க வேண்டுமென அனைவருமே நினைத்தார்கள். ஆனால் இன்று என் படம் மட்டுமே ஓட வேண்டும், நான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என பலரும் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். இன்னொரு தயாரிப்பாளரின் படத்திற்கு திரையரங்குகள் கொடுக்க வேண்டுமே என அவர்கள் நினைப்பது இல்லை.
அந்த வகையில் இன்று சினிமாவை அழிப்பது சுயநலம் தான். அப்படி நினைத்தால் ஒரு காலகட்டத்தில் சினிமாவும் அழிந்து இந்த சுயநலத்தில் இருப்பவர்களும் அழிந்து போவார்கள். முன்பெல்லாம் படம் பார்க்கும் ரசிகர்கள், சில முக்கியமான பத்திரிகைகளில் வெளியாகும் விமர்சனங்களுக்காக காத்திருந்து அதை படித்துவிட்டு படம் பார்க்க சென்றார்கள்.
விமர்சனம் வரவில்லை என்றால் போன் போட்டுக் கேட்டார்கள். ஆனால் இன்று ஒரு சிலர் செய்யும் விமர்சனங்களை பார்க்கும்போது ஏன் தான் இவர்கள் இப்படி விமர்சனம் பண்ணுகிறார்கள் என தோன்றுகிறது. வன்மத்தைக் கக்குகிறார்கள். அப்படிப்பட்டவர்களின் விமர்சனத்தை தான் இன்றைய ரசிகர்களின் மன நிலையும் நம்புகிறது. யாரையாவது திட்டினால் தான் அவர்களுக்கு சந்தோசமாக இருக்கிறது. பாசிட்டிவாக சொன்னால் அதை ஒதுக்கி விடுகிறார்கள்.
சின்ன படம் ஓட வேண்டும் என நினைப்பவர்கள் அனைவருமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஒரு நல்ல படம் வெளியானால் அந்த படக்குழுவினரை தன் வீட்டிற்கே வரவழைத்து வாழ்த்துகிறார். இன்றைக்கு அப்படிப்பட்ட மனம் வேறு யாரிடம் இருக்கிறது? ரஜினி சாரே நன்றாக இருக்கிறது என சொல்லிவிட்டார் என்பதற்காக பல பேர் அந்த படத்தை பார்க்கிறார்கள். அந்த வகையில் ஒரு சிறிய பட வெற்றிக்கு சூப்பர் ஸ்டார் உதவி செய்கிறார். ஏனென்றால் அவர் சினிமா நன்றாக இருக்க வேண்டுமென நினைப்பவர்.
அவருடைய ஒரு பட வெற்றி விழாவில் இயக்குநர் சேரன் படத்தைப் பாராட்டி அவருக்கு தங்கச்சங்கிலி போட்டு பரிசளிக்கிறார். எந்த ஹீரோவுக்கு இப்படி ஒரு மனசு வரும்? அதே போல இப்போது இருக்கும் பெரிய ஹீரோக்கள், உங்களுக்குப் பிடித்த சின்ன படங்கள் இருந்தால், அது நன்றாக இருந்தால் தாராளமாக மனது விட்டு பாராட்டுங்கள்” என்று பேசினார் இயக்குநர் பேரரசு.