பணி ஒழுக்கமின்மையால், சஸ்பெண்ட் செய்யப்படுகிறார், போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா (வசந்த் ரவி). அவருடைய பகுதியில், ஒரே பாணியில் தொடர் கொலைகள் நடைபெறுகின்றன. அதாவது கொல்லப்பட்டவர்களின் மணிக்கட்டுத் துண்டிக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் இந்திராவின் மனைவி கயலும் (மெஹ்ரின் பிர்ஸாடா) அதே பாணியில் கொல்லப்படுகிறார். இதையடுத்து கொலைகாரன் யார் என்பதை அறிய களமிறங்குகிறார், இந்திரா. கொலைகாரன் யார்? ஏன் கொலைகளைச் செய்கிறார், மனைவியின் கொலைக்கு என்ன காரணம் என்பது கதை.
இந்திரா என்கிற பெயரை வைத்து இது நாயகியை மையப்படுத்திய படம் என்று நினைத்துவிடக் கூடாது. நாயகனின் பெயர்தான் இந்திரா. போலீஸ் வேலையிலிருந்து நீக்கப்பட்ட விரக்தியுடன் நாயகன் இருப்பது போலத்தான் கதை தொடங்குகிறது. பிறகு சீரியல் கொலைகளுக்கு நகர்கிறது. இதுபோன்ற படங்களில் கொலையாளி யார் என்று தெரியாமல்தான் கதை நகரும். ஆனால், இதில் எடுத்த எடுப்பிலேயே கொலையாளி யார் என்பதை இயக்குநர் சபரீஷ் நந்தா சொல்லிவிடுகிறார்.
நாயகனின் மனைவியும் கொலையான பிறகு, கதை சற்று சூடுபிடிக்கிறது. ஆனால், அந்தப் பரபரப்பு, அடுத்த சில காட்சிகளில் சைக்கோ கொலையாளி சிக்கியதும் அடங்கிவிடுகிறது. அதுவும் த்ரில்லர் படங்களுக்கே உரிய துரத்தல், நுண்ணறிவு எதுவும் இல்லாமல் சைக்கோ கொலையாளி போலீஸிடம் சிக்கிக் கொள்வது பரிதாபமாக இருக்கிறது.
கொலையாளி சிக்கிய பிறகு அந்த இடத்தில் இயக்குநர் வைத்திருக்கும் திருப்பம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை அடுத்து வரும் ஃபிளாஷ்பேக் காட்சிகள் ரசிக்க வைக்கத் தவறி விடுகின்றன. ஓர் இளம் பெண் சர்வ சாதாரணமாகக் காணாமல் போவதும், போலீஸ் இன்ஸ்பெக்டரின் வீட்டிலேயே, அந்நியர் ஒருவர் 3 மாதங்கள் இருப்பது போன்ற காட்சிகளை, நம்ப முடியவில்லை. அது படத்தை முடிப்பதற்காகத் திணிக்கப்பட்ட காட்சிகளாகவே இருக்கின்றன. நாயகனின் கதாபாத்திரம் தெளிவாகச் சித்தரிக்கப் படவில்லை. இந்தப் படத்
துக்கு ஏன் சைக்கோ கொலையாளி தேவைப்பட்டார் என்பதை இயக்குநர்தான் சொல்ல வேண்டும்.
படத்தின் நாயகன் வசந்த் ரவி, விரக்தி, ஆற்றாமை, கோபம், பயம், ஆக்ரோஷம் என வெரைட்டியாக நடித்திருக்கிறார். நாயகியாக வரும் மெஹ்ரின் பிர்ஸாடா கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார். வளர்ந்து வரும் நாயகியான அனிகா சுரேந்திரனுக்கு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரம். சைக்கோ கொலையாளியாக வரும் சுனில் தனக்குக் கொடுத்த கதாபாத்திரத்தை நிறைவாகச் செய்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் கல்யாண் மாஸ்டர் விரைப்பாக இருக்கிறார். துணைக் கதாபாத்திரங்களும் போதுமான பங்களிப்பை வழங்கியிருக்கின்றன.
த்ரில்லர் படத்துக்குரிய பின்னணி இசையை சிறப்பாக வழங்கி இருக்கிறார் இசை அமைப்பாளர் அஜ்மல் தஹ்சின். பிரபு ராகவ்வின் ஒளிப்பதிவிலும், ரவீனின் படத்தொகுப்பிலும் குறையில்லை.