“இந்திய சினிமாவுக்கு ஓர் அரிய செல்வம்” என்று நடிகை ஸ்வாசிகாவுக்கு நடிகர் சூரி புகழாரம் சூட்டியிருக்கிறார்.
பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ஸ்வாசிகா, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாமன்’. இப்படம் ரூ.30 கோடியை கடந்து தமிழகத்தில் வசூல் சாதனை புரிந்திருக்கிறது. இதனால் இப்படம் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே நல்ல லாபம் கிடைத்துள்ளது.
இப்படத்தில் சூரிக்கு அக்காவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஸ்வாசிகா. அவருடன் நடித்த அனுபவம் குறித்து சூரி, “என் அன்பும் நன்றிகளும் கிரிஜா அக்காவுக்கு, ‘மாமன்’ படத்தில் உங்கள் நடிப்பு என் மனதை ஆழமாக கவர்ந்தது. அக்கா, லட்டு அம்மா, மகள், மனைவி – ஒவ்வொரு வேடத்திலும் நீங்கள் காட்டிய திறமை ஒளிர்ந்தது.
நீங்கள் நடித்த ஒவ்வொரு காட்சியிலும் உண்மையான உணர்வுகள் இருந்தன. அந்த உணர்ச்சிகள்தான் இந்தப் படத்தின் சிறப்பை உருவாக்கியது. உங்களோடு நடித்தது எனக்கு ஒரு நல்ல அனுபவமாகவும், நல்ல போட்டியாகவும் இருந்தது. நிச்சயமாக, நீங்கள் இந்திய சினிமாவுக்கு ஓர் அரிய செல்வம். உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் பயணம் எப்போதும் தொடரும்” என்று தெரிவித்துள்ளார் சூரி.