சமூக வலைதளங்களின் வருகைக்குப் பிறகு ஒரு பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு என்பது இணையத்தில் அதற்கு கிடைக்கும் பார்வைகளை பொறுத்துதான் என்றாகிவிட்டது. ஒரே நாளில் ஒருவரை உச்சத்தில் தூக்கி வைப்பதும், கீழ தள்ளுவதும் இணையத்தால் சாத்தியமாகிறது.
சமூக வலைதளங்களில் தங்களின் திறமையின் மூலம் டிரெண்டிங்கில் தொடர்ந்து இடம்பெறுபவர்களே இளைய தலைமுறையால் கொண்டாடப்படுகின்றனர். அந்த வகையில் அடுத்தடுத்து ஹிட் பாடல்களை கொடுத்து ஜென்ஸீ தலைமுறையின் தவிர்க்கமுடியாத பாடகராக மாறியிருப்பவர் சுப்லாஷினி. ’கோல்டன் ஸ்பேர்ரோ’ தொடங்கி இன்று அனைவரும் முணுமுணுக்கும் ‘மோனிகா’ வரை சுப்லாஷினி பாடிய எல்லா பாடல்களும் பயங்கர வைரல்.
சென்னையில் பிறந்து வளர்ந்தவரான சுப்லாஷினிக்கு சிறுவயது முதலே இசையில் ஆர்வம் என்றாலும், முறைப்படி இசைப் பயிற்சி எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை. பள்ளி, கல்லூரி காலங்களில் மேடையில் பாடுவதோடு சரி. 2017-ஆம் ஆண்டுவாக்கில் இன்ஸ்டாகிராமுக்குள் நுழைந்த சுப்லாஷினி அவ்வப்போது பாடல்களை பாடி அதை வீடியோவாக அப்லோடி வந்துள்ளார். அந்த கவர் சாங்ஸ் ஓரளவு நல்ல வரவேற்பை பெறவே, தொடர்ந்து சொந்தமாக பாட்டெழுதி அதையும் பாடி பதிவேற்றியுள்ளார்.
பிறகு 2021-ஆம் ஆண்டு ‘காத்தாடி’ என்ற ஆல்பம் பாடலை பாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனந்த் காசிநாத் எழுதி இசையமைத்த அந்தப் பாடல் கரோனா காலகட்டத்தில் வைரலானது. இது ஜி.வி.பிரகாஷின் கவனத்தை ஈர்க்கவே, தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘நிலவுக்கு என்மேல என்னடி கோபம்’ படத்தில் இடம்பெற்ற ‘கோல்டன் ஸ்பேர்ரோ’ பாடலை பாட சுப்லாஷினிக்கு வாய்ப்பளித்தார். இந்த பாடல் 2கே கிட்ஸ் மத்தியில் படுபயங்கர ஹிட்டானது.
அதுவரை ஒரு நிறுவனத்தில் மனிதவள அதிகாரியாக பணிபுரிந்து வந்த சுப்லாஷினி, அதன்பிறகு வேலையை விட்டுவிட்டு முழுநேர பாடகியாக மாறிவிட்டார். அப்போதுதான் ‘புஷ்பா 2’ படத்தில் இடம்பெற்ற ‘கிஸ்ஸிக்’ பாடலுக்காக ஒரு புதிய குரலை தேடியிருக்கிறார் தேவிஸ்ரீ பிரசாத். சுப்லாஷியின் குரலால் ஈர்க்கப்பட்ட அவர், அப்பாடலை தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளிலும் பாடும் வாய்ப்பை அவருக்கே வழங்கினார். ’புஷ்பா 2’ பான் இந்தியா லெவலில் வெற்றி பெற்றதை அடுத்து, இந்தப் பாடலும் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இதுவரை இப்பாடல் தெலுங்கில் 135 மில்லியன், தமிழில் 27 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.
இதன்பிறகு தான் இசையமைத்து நடித்த ‘கிங்ஸ்டன்’ படத்தில் இடம்பெற்ற ‘ராசா ராசா’ பாடலை பாடும் வாய்ப்பை மீண்டும் சுப்லாஷினிக்கு வழங்கினார் ஜி.வி.பிரகாஷ். இந்தப் பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் வெளியான ‘தலைவன் தலைவி’ படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் ‘பொட்டல முட்டாயே’ பாடல்தான் அந்த ஆல்பத்திலேயே மிகப் பெரிய ஹிட்டடித்த பாடல். கிராமத்து பாணியில் உருவான அந்தப் பாடலை சந்தோஷ் நாராயணனுடன் சேர்ந்து சுப்லாஷினி பாடியிருந்தார். அதில், ‘லே லே லே…’ என்ற சுப்லாஷ்னியின் தொடக்க ஹம்மிங்கே செம்ம வைரல்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படத்திலிருந்து வெளியிடப்பட்ட முதல் சிங்கிளில் அனிருத் உடன் சுப்லாஷினி பாடிய பாடல்தான் ‘மோனிகா’. யூடியூப், ஸ்பாட்டிஃபை மட்டுமின்றி இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என எல்லா தளங்களிலும் ட்ரெண்டிங் இந்த பாடல்தான். இதுவரை இந்தப் பாடல் யூடியூபில் 55 மில்லியன் பார்வைகள் பெற்றுள்ளது. ஸ்பாட்டிஃப தளத்தில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் உள்ளது.
இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடவேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கும் சுப்லாஷினி, இந்த ஆண்டு இறுதிக்குள் சுயாதீன ஆல்பம் ஒன்றை வெளியிடும் திட்டத்தில் இருக்கிறாராம்.