டாம் ஹாலண்ட் நடிக்கும் ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
சூப்பர் ஹீரோ கதையை கொண்ட ‘ஸ்பைடர் மேன்’ படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 8 ஸ்பைடர் மேன் திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
இதில் டாம் ஹாலண்ட் ஸ்பைடர் மேனாக நடித்து ‘ஸ்பைடர் மேன்: ஹோம் கமிங்’ , ‘ஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம்’, ‘ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்’ ஆகிய 3 படங்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இப்போது அவர் நடிப்பில் நான்காவதாக உருவாகியுள்ள படத்துக்கு ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ என்று தலைப்புவைக்கப்பட்டுள்ளது.
அண்மையில், இந்தப் படத்தில் ஸ்பைடர் மேனின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்காட்லாந்து நாட்டின் க்ளாஸ்கோ நகரத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்படுகின்றன. அப்போது ரசிகர்கள் எடுத்த ஸ்பைடர்மேனின் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
குறிப்பாக, நூற்றுக்கணக்கான ரசிகர்களுக்கு நடுவே டாம் ஹாலண்ட் ஸ்பைடர்மேன் உடையில் ஒரு காருக்கு மேலே நிற்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஜூலை 31-ல் இப்படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.