‘ஆர்ஆர்ஆர்‘ வெற்றிக்குப் பிறகு மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார், ராஜமவுலி. இதில் பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படம், ‘இண்டியானா ஜோன்ஸ்’ போல உலக அளவிலான ஆக்ஷன் அட்வென்சர் படமாக இருக்கும் என்று ராஜமவுலி ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இதன் முக்கியமான காட்சிகள் காசியில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. மகேஷ்பாபுவின் கேரக்டரை ஹனுமனை நினைவூட்டும் வகையில் வடிவமைத்துள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு கென்ய காடுகளில் நடக்க இருப்பதாகவும் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தெரிவித்திருந்தார்.
அதன்படி, கென்யாவில் இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. இதற்காக அங்கு சென்ற ராஜமவுலி மற்றும் அவருடைய குழு, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் முசாலியா முடவாடி மற்றும் அதிகாரிகளைச் சந்தித்தனர். அந்தப் புகைப்படங்களைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார், கென்ய அமைச்சர்.
இந்நிலையில் கென்யாவில் இதன் படப்பிடிப்பு நடந்தபோது, ரசிகர் ஒருவர் எடுத்த புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. அதில் சிங்கத்தின் முன்னால் மகேஷ் பாபு நிற்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. கடுமையான பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தியும் காட்சி கசிந்திருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஒடிசாவில் இதன் படப்பிடிப்பு நடந்தபோதும் இப்படக் காட்சிகள் கசிந்திருந்தன.