இணையத்தில் எழுந்த கிண்டல்களுக்கு தனது பேச்சில் பதிலடி கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.
சமீபமாக இணையத்தில் பெரும் கிண்டலுக்கு ஆளாகி வந்தார் சிவகார்த்திகேயன். ஏனென்றால் சிறிய படங்களில் எந்தவொரு படம் நன்றாக இருந்தாலும், அப்படக்குழுவினரை அழைத்து பாராட்டி வந்தார். இதுவே நாளடைவில் இணையத்தில் கிண்டலாக மாறியது. ‘கூலி’ வெளியான அன்று கூட பலரும் சிவகார்த்திகேயன், ரஜினியை அழைத்து பாராட்டினார் என்று இணையத்தில் பரப்பினார்கள்.
இந்த கிண்டல்களுக்கு பதிலடிக் கொடுக்கும் வகையில், ‘மதராஸி’ இசை வெளியீட்டு விழாவில் பேசும் போது, ”ஒரு படம் நன்றாக இருக்கிறது, எனக்கு பிடித்திருக்கிறது என்றால் அப்படக்குழுவினரை அழைத்து பாராட்டுகிறேன். இவன் என்ன பெரிய ஆளா என்று கேட்கிறார்கள். நல்லது பண்ணுவதற்கு எதற்கு யோசிக்க வேண்டும்.
விமர்சனமும் ஒரு பகுதி தான். பல சாதனைகளை செய்த சச்சினையும் விமர்சனம் செய்தார்கள். சென்னை அணிக்காக 5 கோப்பைகள் வென்ற பிறகும், தோனியையும் விமர்சனம் செய்தார்கள். இப்படியிருக்கும் போது நான் யாரை குறைச் சொல்வது. நல்லவற்றை எடுத்துக் கொண்டு முன்னே சென்றுவிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிஜு மேனன், வித்யூத் ஜாம்வால், விக்ராந்த், ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மதராஸி’. அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது.