இணையத்தில் திடீரென்று ‘கருப்பு’ படத்தினை முன்வைத்து பெரும் கிண்டல்கள் எழுந்தது. இதற்கு காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு’. இப்படத்தின் வெளியீடு எப்போது என்பது தெரியாமல் இருக்கிறது. இதனால் தீபாவளி வெளியீடு, பொங்கல் வெளியீடு என்ற குழப்பங்களும் ஏற்பட்டது. இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது.
இதனிடையே கடந்த சில தினங்களாக ‘கருப்பு’ படம், சூர்யா மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் ஆகியவை இணையத்தில் கடும் கிண்டலுக்கு ஆளானது. ஏனென்றால், சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘பராசக்தி’ திரைப்படம் பொங்கல் வெளியீட்டை உறுதிப்படுத்திவிட்டது. ஜனவரி 14-ம் தேதி வெளியீடு என்று ஒரு சிறுவீடியோ பதிவொன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். இதனால் ‘கருப்பு’ திரைப்படம் பொங்கல் வெளியீட்டுக்கும் சாத்தியமில்லை என்பது உறுதியாகிறது.
இதனாலேயே ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. இதனை முன்வைத்து பல்வேறு ரசிகர்கள் ‘கருப்பு’ படக்குழுவினரை கடுமையாக சாடினார்கள். மேலும் சிலர் பிப்ரவரி 30-ம் தேதி ‘கருப்பு’ வெளியீடு என்று போஸ்டர் ஒன்றை தயார் செய்து வெளியிட்டார்கள். அதுமட்டுமன்றி ‘கருப்பு’ படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது என்றும் சிலர் குறிப்பிட்டார்கள். இதனால் இணையத்தில் ‘கருப்பு’ படம் கடுமையான எதிர்வினைகளை சந்தித்து வருகிறது.
விரைவில் ‘கருப்பு’ படம் எப்போது வெளியீடு என்பதை படக்குழுவினர் அறிவித்தால் மட்டுமே, இந்த விவகாரம் முடிவுக்கு வரும் என்பது உறுதி.