‘இட்லி வாங்க காசில்லை’ என்ற பேசிய விவகாரம் தொடர்பாக தனுஷ் விளக்கம் அளித்துள்ளார்.
தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய ஊர்களைத் தொடர்ந்து திருச்சியிலும் விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தனுஷ், அருண் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
மதுரையில் நடைபெற்ற நிகழ்வின் போது, இட்லி வாங்கி சாப்பிடவே கஷ்டப்பட்டதாக தனுஷ் பேசியிருந்தார். இந்த விவகாரத்தை இணையத்தில் பலரும் கிண்டலுக்கு உள்ளாக்கினார்கள். பலரும் வருடத்தைக் குறிப்பிட்டு இவர் பேசிய தவறு, மேடைக்காக பேசியிருக்கிறார் எனவும் குறிப்பிட்டு இருந்தார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக திருச்சியில் நடைபெற்ற நிகழ்வில் தனுஷிடம் கேள்விக் கேட்கப்பட்டது. அதற்கு தனுஷ், “நான் பிறந்தது 1983-ம் ஆண்டு. அப்பா இயக்குநரானது 1991-ம் ஆண்டு தான். அந்த 8 ஆண்டுகள் கொஞ்சம் வறுமை தான். 1991-ம் ஆண்டு அப்பா இயக்குநராகிவிட்டாலும் 1995-ம் ஆண்டு வரையிலும் வறுமை தான். ஏனென்றால் 4 குழந்தைகள் அனைவரையும் படிக்க வைக்க வேண்டும் என்ற சூழல்.
1995-ம் ஆண்டில் இருந்து நல்லதொரு வாழ்க்கை சூழல் அமைந்துவிட்டது. சிறுவயதிலேயே வீட்டில் இருப்பவர்களிடம் சென்று காசு கொடு என்று கேட்டால், உடனே கொடுத்துவிட மாட்டார்கள். நாங்கள் நால்வருமே வீட்டின் சூழலை புரிந்து கொண்ட குழந்தைகள் தான். ஆகையால் வீட்டில் கேட்க மாட்டோம். வயலில் வேலை செய்து கிடைக்கும் பணத்தில் இட்லி வாங்கி சாப்பிடுவோம்.” என்று பதிலளித்துள்ளார்.