தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம், ‘இட்லி கடை’. இதில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்துள்ளார். அக். 1-ல் வெளியாகும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்ட இவ்விழாவில் தனுஷ் பேசும்போது கூறியதாவது:
‘அதென்ன இட்லி கடை? இதைவிட சக்தி வாய்ந்த தலைப்பை வைத்திருக்கலாமே’ என்று சிலர் கேட்கிறார்கள். சில படங்களில் ஹீரோவின் பெயரையே தலைப்பாக வைப்பார்கள். இந்தப் படத்தின் ஹீரோ, இட்லி கடைதான். அதனால்தான் வைத்தேன்.
நாங்கள் வெளிநாடு சென்றிருந்தபோது என்னுடன் வந்தவர்கள், ‘டின்னரு’க்காக வெளியே சென்றுவிட்டார்கள். நான் தனியாக இருந்தேன். ‘நான் ஏரிக்கரை மேலிருந்து…’ என்ற இளையராஜா சார் பாடல் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு சில பாடல்கள் நம்மை எங்கோ அழைத்துச் செல்லும். இந்தப் பாடல் என் பாட்டியின் கிராமத்துக்குக் கூட்டிச் சென்றது. அங்கு ஒரு இட்லி கடை உண்டு. சாப்பிடத் தோன்றும். காசு இருக்காது. வயலில் பூப்பறித்துக் கொடுத்தால் 2 ரூபாய் கிடைக்கும். அதை எடுத்துக் கொண்டு அந்தக் கடையில் 4, 5 இட்லி வாங்கி சாப்பிடுவோம். அதில் கிடைத்த ருசியும் நிம்மதியும் சந்தோஷமும் இப்போது பெரிய உணவகங்களில் சாப்பிடும்போது கிடைக்கவில்லை.
அந்த இட்லி கடையை வைத்து, ஏன் படம் இயக்கக் கூடாது என்று தோன்றியது. அந்த கிராமத்தில் என்னைப் பாதித்த உண்மைக் கதாபாத்திரங்களையும் சென்னையில் நான் சந்தித்த கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கிய கதை இந்தப் படம்.
நம் அடையாளம் பூர்வீகம்தான். நம்முன்னோர் களின் மூச்சுக் காற்றும் நம் மண்ணின் சாமியும் சேர்ந்ததுதான் குலதெய்வம். சில விஷயங்களை மறந்துவிடக் கூடாது. வாழ்க்கையைத் தேடி நாம் எந்த திசைக்குப் போனாலும் நாம் வந்த வழியை மறக்கக் கூடாது என்பதைச் சொல்லும் படம்தான் இது. இவ்வாறு தனுஷ் பேசினர்.