இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ், உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல இரட்டை இசை அமைப்பாளர்கள் சங்கர்-கணேஷ். இவர்கள் இணைந்து பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளனர். இதில் சங்கர் ஏற்கெனவே காலமாகி விட்டார். இந்நிலையில் கணேஷுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப் பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அவர் மகனும் நடிகருமான ஸ்ரீகணேஷ் கூறும்போது, “அப்பாவுக்கு ஏற்கெனவே இதய பிரச்சினை இருந்தது. மருத்துவர்கள் பாடக் கூடாது என்று கூறியிருக்கிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலினை அப்பாவுக்குப் பிடிக்கும் என்பதால் திமுகவின் முப்பெரும் விழாவுக்கான பாடல் ஒத்திகைக்காக ரெக்கார்டிங் ஸ்டூடியோ சென்றார். அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நுரையீரலில் நீர் கோர்த்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” என்றார்.