இந்தியாவின் பெரும்பான்மை நிலப்பரப்பை தன்னுடைய கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்த மன்னர், சந்திரகுப்தர் மவுரியர். இந்தியாவின் முதல் பேரரசர் என்று கணிக்கப்படும் இவர் உருவாக்கிய மவுரிய பேரரசு, பல்வேறு பகுதிகளைத் தங்கள் ஆளுகைக்குள் அடக்கி இருந்தது. சந்திரகுப்தர், அவ்வாறு போரில் வென்றதற்கு, அவருடைய ராஜகுரு, அர்த்தசாஸ்திரம் எழுதிய சாணக்கியரே காரணம் என்பார்கள். இவர்கள் இருவரையும் மையப்படுத்தி உருவான திரைப்படம், ‘சந்திரகுப்த சாணக்கியர்’.
இந்தப் படத்தைக் கோவையைச் சேர்ந்த சி.கே.சச்சி இயக்கினார். எழுத்தாளர் ஆர்.கே.நாராயணனின் உறவினரான இவருடைய இயற்பெயர் சி.கே.சதாசிவம். அந்த காலத்திலேயே சட்டம் படித்திருந்த இவர், சினிமா ஆர்வத்தால், லண்டனில் திரைப்பட இயக்கம் குறித்து கற்றுவிட்டு, எல்லீஸ்ஆர்.டங்கனின் ‘சதிலீலாவதி’யில் பணிபுரிந்தார். பின்னர் அவர் இயக்கிய படம், ‘சந்திரகுப்த சாணக்கியர்’.
இதில், பவானி கே.சாம்பமூர்த்தி, என்.சி.வசந்தகோகிலம், பிருகதாம்பாள், டி.கே. கல்யாணம், பசுபுலேட்டி னிவாசுலு நாயுடு, பி.சாரதாம்பாள் என பலர் நடித்தனர். அந்த காலத்தில் பிரபல கர்னாடக இசைப் பாடகியாக இருந்த வசந்த கோகிலம் நடித்த முதல் படம் இது. எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு இணையாக வரக்கூடியவர் என எதிர்பார்க்கப்பட்ட வசந்தகோகிலம், சில படங்களுடன் நடிப்பை நிறுத்திவிட்டார்.
அப்போது பிரபலபலமாக இருந்த நகைச்சுவை நடிகரான எஸ்.எஸ். கோக்கோ என்ற பசுபுலேட்டி னிவாசுலு நாயுடு, சர்க்கஸில் பயிற்சிப் பெற்றவர். அவர் படங்களில் தனது செய்கைகளின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார். அவருடைய பிரபலமான செயல்களில் ஒன்று, சிகரெட்டை தூக்கிப் போட்டுப் பிடிப்பது. இந்த ஸ்டைல் அப்போது அதிகம் ரசிக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இளம் வயதிலேயே தற்கொலை செய்து கொண்டார்.
இது வரலாற்றுப் படம் என்பதால், படத்துக்கான மேக்கப் சாதனங்கள், மற்றும் நகைகள் இங்கிலாந்தில் இருந்து கொண்டு வரப்பட்டன. ரசிகர்களிடம் ஆச்சரியமாகப் பேசப்பட்ட இந்த விஷயம், அந்த காலகட்டத்தில் பத்திரிகைகளில் செய்தியாக வெளியாயின. பாபநாசம் சிவன் இசையமைத்தார். தங்களுக்கான பாடல்களை, இளவரசி சாயாவாக நடித்த வசந்த கோகிலமும் சந்திரகுப்தராக நடித்த பவானி கே.சாம்பமூர்த்தியும் பாடினர்.
எஸ்.தாஸ் ஒளிப்பதிவு செய்த இந்தப் படம் 1940-ம் வருடம் ஆக.24-ம் தேதி வெளியானது. அந்தக் காலகட்டத்தில் சில படங்களுக்கு இரண்டு தலைப்புகள் வைப்பது பேஷனாக இருந்தது. அதே போல இந்தப் படத்துக்குச் சந்திரகுப்த சாணக்கியா (அல்லது) தறுதலை தங்கவேலு என்று தலைப்பு வைத்திருந்தனர். ஆனால் பெரும் பொருட்செலவில் உருவான இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்பது சோகம்!