பிரபல ஹாலிவுட் நடிகரான டென்ஸல் வாஷிங்டன் (70), எ சோல்ஜர்ஸ் ஸ்டோரி, க்ரை ஃபிரீடம், மால்கம் எக்ஸ், ஃபிளைட், த டிராஜடி ஆஃப் மெக்பத், அமெரிக்கன் கேங்ஸ்டர், கிளாடியேட்டர் 2 என பல படங்களில் நடித்துள்ளார். 9 முறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட டென்ஸல் வாஷிங்டன், ‘குளோரி’, ‘ட்ரெய்னிங் டே’ ஆகிய படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவர் இப்போது அளித்துள்ள பேட்டியில், ஆஸ்கர் விருதுகள் மீது ஆர்வம் இல்லை என்று கூறியுள்ளார். அவர் கூறும்போது, “ நான் விருதுகளைப் பெறுவதற்காகப் படங்களைத் தேர்வு செய்வதில்லை. அதுபோன்ற விஷயங்களில் எனக்கு ஆர்வமும் கவலையுமில்லை. என் கடைசிக் காலத்தில் ஆஸ்கர் விருதுகள் எனக்கு எந்த நல்ல விஷயத்தையும் செய்யப் போவதில்லை என்றே நினைக்கிறேன். மனிதன் விருதைத் தருகிறான், கடவுள் வெகுமதியைத் தருகிறான்” என்று தெரிவித்துள்ளார்.