ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் ‘ஹோம்பவுண்ட்’ என்ற இந்திப் படம் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விருதின் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படப் பிரிவுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து, ஒவ்வொரு வருடமும் திரைப்படங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இருந்து கடந்த வருடம் ‘லாபதா லேடீஸ்’ தேர்வு செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு நடக்கும் 98-வது ஆஸ்கர் விருதுக்கு ‘ஹோம்பவுண்ட்’ (Homebound) என்ற இந்திப் படம் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்படுகிறது.
நீரஜ் கேவான் இயக்கியுள்ள இதில், இஷான் கட்டார், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் உள்பட பலர் நடித்துள்ளனர். கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் செப்.26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்பே பல்வேறு சர்வதேசப் பட விழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது.
தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் பஷாரத் பீர் என்பவர் எழுதிய கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் இது.
வட இந்திய கிராமம் ஒன்றில் வாழும் முகமது ஷோயப் (இஷான் கட்டார்), சந்தன் குமார் (விஷால் ஜெத்வா) ஆகிய நண்பர்களைப் பற்றிய கதை இது. இருவருக்கும் போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்று கனவு. ஆனால் சாதி, மத வேறுபாடுகள் போன்ற சமூகத்தின் பழமைகள், அவர்களுக்குத் தடையாக நிற்கின்றன. ஷோயப் தனது மத அடையாளத்தாலும், சந்தன் தனது சாதியாலும் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். சமூக பழமைகள், நம் கனவுகளை விடப் பெரியதா? என்று சிந்திக்க வைக்கும் வகையில் இந்தப் படம் உருவாகியுள்ளது.