ஆமிர்கானை வைத்து ‘இரும்புக்கை மாயாவி’ இயக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு லோகேஷ் கனகராஜ் விளக்கமளித்துள்ளார்.
ரஜினி நடித்துள்ள ’கூலி’ படத்தினை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து நாயகனாக நடிக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக கார்த்தி நடிக்கவுள்ள ‘கைதி 2’ பணிகளை கவனிக்கவுள்ளார். இப்படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
‘கைதி 2’ படத்தினை முடித்துவிட்டு, ஆமிர்கான் நடிக்கவுள்ள படத்தினை இயக்கவிருப்பதை பேட்டியொன்றில் உறுதிப்படுத்தினார் லோகேஷ் கனகராஜ். ’இரும்புக்கை மாயாவி’ கதையைத் தான் ஆமிர்கான் வைத்து இயக்கவுள்ளார் என்று பலரும் தெரிவித்தார்கள். ஏனென்றால், அக்கதையில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக லோகேஷ் கனகராஜ் கூறும்போது, ”’இரும்புக்கை மாயாவி’ படத்தை சூர்யா சாரை தவிர்த்து ஆமிர்கான் சாரை வைத்து இயக்கவிருப்பதாக நினைக்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கதை ‘இரும்புக்கை மாயாவி’. சமீபத்தில் வந்த சில படங்களில் அக்கதையில் இருந்த முக்கியமான காட்சியமைப்புகள் வந்துவிட்டது. அதெல்லாம் தூக்கிவிட்டு இப்போது மாறி எழுதினால் அப்படியே வேறொரு புதிய கதையாக வரும். அக்கதை ஒரு புதுமையான ஆக்ஷன் கதையாக இருக்கும். அதில் கேங்ஸ்டர் உள்ளிட்ட விஷயங்கள் எல்லாம் இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.