ஆணவக் கொலையை மையமாக வைத்து உருவாகும் படத்துக்கு ‘நெல்லை பாய்ஸ்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை ‘அருவா சண்ட’ படத்தைத் தயாரித்த வி.ராஜா தயாரிக்கிறார்.
கதையின் நாயகனாக புதுமுகம் அறிவழகனும் நாயகியாக ஹேமா ராஜ்குமாரும் நடிக்கின்றனர். மற்றும் வேல.ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். ரஷாந்த் அர்வின் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கதை திரைக்கதை, வசனம், எழுதி, இயக்கி, எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார் கமல் ஜி.
“சாதி மறுப்பு திருமணங்களை அங்கீகரிக்காத ஆணவக் கொலைகள் சமூகத்தில் நடந்து வருகின்றன. இதில் தென் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதைத் தோலுரித்துக் காட்டும் விதமாகவும், காதலுக்கு மட்டுமல்ல, நட்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது இந்த நெல்லை சீமை என்பதையும் காட்டும் படமாக இது இருக்கும்” என்றது படக்குழு.