சென்னை: பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா உடன் நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றது.
‘மெகந்தி சர்கஸ்’, ‘பென்குவின்’ ஆகிய படங்களில் நடித்து பரவலாக கவனம் பெற்றவர் மாதம்ட்படி ரங்கராஜ். கோவையைச் சேர்ந்த இவர் புகழ் பெற்ற சமையல் கலைஞர் ஆவார். பெரும்பாலும் திரையுலக பிரபலங்கள் பலரின் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் இவரது சமையல்தான் அரங்கேறும். பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் இவரது சமையல் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ கடந்த இரண்டு சீசன்களாக நடுவராக பங்கேற்று வருகிறார். ரங்கராஜுக்கு ஏற்கெனவே ஸ்ருதி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த சூழலில் இருவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜுடன் இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.
இந்த நிலையில் தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் திருமணம் ஆகிவிட்டதாக ஜாய் கிரிசில்டா தனது சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். மேலும் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜாய் கிரிசில்டாவுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு ’பொன்மகள் வந்தாள்’ பட இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் உடன் திருமணம் நடைபெற்று பின்னர் விவாகரத்து ஆனது.