இசை அமைப்பாளர் இளையராஜா, தனது 83-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையடுத்து திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்தனர். சிலர் நேரில் சந்தித்தும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
முதல்வர் வாழ்த்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “நாட்டுப்புற இசை, மெல்லிசை, துள்ளலிசை, மரபிசை, தமிழிசை, மேற்கத்திய இசை என அனைத்திலும் கரை கண்டவர் இளையராஜா. தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாகத் திகழ்கிறார். தமிழ்நாட்டில் இளையராஜாவின் சிம்பொனி இசை, ஆக.2-ல் ஒலிக்க உள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாகக் காத்திருக்கிறேன். நேற்றும் இன்றும் என்றும் இளையராஜாவின் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த இளையராஜா, “பிறந்த நாள் வாழ்த்துக் கூற பல இடங்களில் இருந்தும் வெகு தூரத்தில் இருந்தும் சிரமப்பட்டு என்னைப் பார்க்க ரசிகர்கள் வந்துள்ளனர். ரசிகர்களைப் பார்த்ததும் வாயடைத்துப் போகிறேன். என் மீது அன்பும் பாசமும் மரியாதையும் பக்தியும் வைத்திருக்கிற கோடானு கோடி ரசிகர்கள் சொல்லும் பிறந்த நாள் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
தமிழக முதல்வர், மத்திய அமைச்சர் அமித் ஷா உள்பட பல முக்கியஸ்தர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த பிறந்த நாள் அன்று உங்களுக்கு ஒரு செய்தியை அறிவிக்கிறேன். நான் லண்டனில் இசை அமைத்த சிம்பொனி இசை நிகழ்ச்சியை, அதே ராயல் பிலார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவை வைத்து ஆகஸ்ட் 2-ம் தேதி தமிழ்நாட்டில் நடத்துகிறேன். அதை நீங்கள் கேட்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் கேட்க வேண்டும்” என்றார்.
தலைவர்கள் வாழ்த்து: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, மநீம தலைவர் கமல்ஹாசன், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.