குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி, இயக்குநர், இசை அமைப்பாளர், தயாரிப்பாளர் என சினிமாவில் அடுத்தடுத்த அவதாரங்களை எடுத்தவர், வீணை எஸ்.பாலசந்தர். ஹாலிவுட் பட பாணியில் அவர் இயக்கி நடித்த ‘அந்த நாள்’ இன்று வரை சிறந்த மிஸ்டரி த்ரில்லர் படத்துக்கான வரிசையில், தனியிடம் பிடித்திருக்கிறது. அமெரிக்கப் படமான ‘எ பிளேஸ் இன் த சன்’ பாதிப்பில் அவர் உருவாக்கிய படம், ‘அவனா இவன்?’
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் நடந்த பரபரப்பான கொலை வழக்குகளில் ஒன்று, ஜில்லெட் (Gillette) வழக்கு. நியூயார்க் நகரில் உள்ள ஆடை தொழிற்சாலை உரிமையாளரின் உறவினர், அங்கு வேலை செய்யும் இளம் பெண் மீது ஆசை கொள்கிறான். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவரை பயன்படுத்துகிறான். தாய்மை அடைகிறார், அந்தப் பெண். அவன் பணக்காரப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள நினைக்கிறான். இதனால் அந்த இளம் பெண்ணை ரிசார்ட் ஒன்றுக்கு அழைத்துச் சென்று படகு சவாரி செல்கிறான். நடு ஆற்றில் அவளை அடித்துக் கொன்று தண்ணீருக்குள் தள்ளிவிட்டு நீந்தித் தப்பிக்கிறான். அவள் இறப்பை ஒரு விபத்து போல செய்ய நினைக்கிறான். போலீஸார் அப்பெண்ணின் உடலைக் கண்டுபிடிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் குற்றவாளியைக் கண்டுபிடித்து தூக்குத்தண்டனை வழங்குகிறார்கள்.
இந்த உண்மைச் சம்பவத்தின் பாதிப்பில், புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரான தியோடர் டிரைசர், ‘அன் அமெரிக்கன் டிராஜடி’ என்ற பெயரில் நாவலாக எழுதினார். இதை ‘எ பிளேஸ் இன் த சன்’என்ற பெயரில் திரைப்படமாக்கினார்கள். மான்டிகோமெரி கிளிப்ட், எலிசபெத் டெய்லர் உள்பட பலர் நடித்த இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது. இதன் பாதிப்பில் தமிழில் உருவான படம், ‘அவனா இவன்?’.
இதை இயக்கி நடித்து, இசை அமைத்து, தயாரிப்பாளராகவும் மாறினார், வீணை எஸ்.பாலசந்தர். தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு எஸ்.பி.கிரியேஷன்ஸ் என்று பெயர் சூட்டினார். திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கு ‘கிரியேஷன்ஸ்’ என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியது அவர்தான். இதில் பாலசந்தருடன் தெலுங்கு நடிகை வசந்தி, நாயகியாக நடித்தார். மேலும் ‘ஜாவர்’ சீதாராமன், லட்சுமிராஜம், குட்டி பத்மினி, மாஸ்டர் ஸ்ரீதர், செருகளத்தூர் சாமா, வி.எஸ்.ராகவன், சி.கே.சரஸ்வதி, எஸ்.என்.லட்சுமி. என பலர் நடித்தனர். எஸ்.பாலசந்தர், தனது மனைவியைக் (லட்சுமி ராஜம்) கொன்று விட்டு மற்றொரு பெண்ணை (வசந்தி) திருமணம் செய்து கொள்கிறார். சுற்றுலா வரும் குழந்தைகளில் 2 பேர், (‘குட்டி’ பத்மினி, ‘மாஸ்டர்’ தர்) கொலையைப் பார்த்து, இறுதியாகக் கொலையாளியைக் கண்டுபிடிக்க உதவுவது கதை.
சிறந்த இயக்கம் மற்றும் சுவாரஸ்யமான கதைக் களத்துடன் படத்தில் பாலசந்தர் இசையமைப்பில் 5 பாடல்கள் இடம்பெற்றன. அதில் ‘கல்யாண பொண்ணு கலங்காதே கண்ணு’ என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தில் நடித்த மற்றும் பணியாற்றியவர்களுக்கு வெற்று காசோலைகளை அனுப்பி, அவர்கள் விருப்பப்படி தொகையை நிரப்பிக் கொண்டு, தனது அலுவலகத்தில் தெரிவிக்கக் கேட்டுக் கொண்டாராம் எஸ்.பாலசந்தர். இந்தப் படத்துக்காக சென்னை, மவுன்ட் ரோடு பகுதியில், அப்போதிருந்த பிரபலமான அசைவ உணவகத்துக்கு எதிரே ஹீரோவுக்கு கட்-அவுட்! கூடவே ஹீரோ அணிந்திருக்கும் கருப்பு கண்ணாடிக்கும் கட்-அவுட் வைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு லென்ஸில் ‘அவனா’ என்றும், மறுபுறம் ‘இவன்’ என்றும் எழுதப்பட்டிருந்தது, மக்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த காலத்தில் அதைப் பெரிய விஷயமாகப் பேசினார்கள். 1962-ம்ஆண்டு ஆக.31-ல் வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.