அரசியலைத் தாண்டி நல்லவிதமாக அனைவரையும் அனைவரும் மதிக்க வேண்டும் என்று சூரி தெரிவித்துள்ளார்.
இன்று முன்னணி நடிகராக சூரி தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவர் நடித்து வரும் படத்தின் குழுவினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தனது பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்கள் மத்தியில் சூரி பேசும் போது, ”’மாமன்’ படத்துக்குப் பின் ‘மண்டாடி’ படத்தில் நடித்து வருகிறேன். இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. முழுக்க மீனவர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய படம். கண்டிப்பாக புதிதாக இருக்கும். தொண்டி அருகே நடக்கும் படகு ரேஸை பின்னணியாகக் கொண்டிருக்கும். கடலில் நடக்கும் வீர விளையாட்டு தான் ‘மாண்டாடி’. அப்படம் வெளியாகும் சமயத்தில் அது குறித்து நிறையப் பேசுகிறேன்.
இப்போது வரும் படங்களிலும் காமெடி நன்றாகவே இருக்கிறது. அடுத்து வருபவர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள். காமெடியனாக இருந்து கதையின் நாயகனாக மாறியிருக்கிறேன். என்னைப் போலவே மற்றவர்களுக்கும் ஆதரவு கொடுங்கள்.
அரசியலைத் தாண்டி நல்லவிதமாக அனைவரையும் அனைவரும் மதிக்க வேண்டும். இன்றைக்கு விஜய் சார் சினிமாவை விட்டு ஒதுங்கி அரசியலுக்கு சென்றிருக்கிறார். நாளை மீண்டும் வரலாம். எனக்கும் அவரைப் பிடிக்கும், அவருக்கும் என்னைப் பிடிக்கும். அவர் அரசியலுக்கு சென்றது அவருடைய விருப்பம்” என்று தெரிவித்துள்ளார் சூரி.