தன்னை பற்றி அனிருத் பேசும் போது, கண் கலங்கியபடியே கேட்டுக் கொண்டிருந்தார் சிவகார்த்திகேயன்.
ஏ.ஆர்.முருகதாஸ் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘மதராஸி’. செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
விழா மேடையில் இசையமைப்பாளர் அனிருத் பேசும் போது, “சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர் நீச்சல்’ படம் தான் எனது முதல் ப்ளாக்பஸ்டர் படம் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன். அப்படத்தில் இருந்து தான் எங்கள் இருவருடைய பயணமும் தொடங்கியது. அதனாலேயே எனக்கு அவருடைய படங்கள் என்றாலே ஒரு பிணைப்பு இருக்கும். 20 ஆண்டுகள் கழித்து என்றாலும் அது மாறாது.
சிவகார்த்திகேயன் எனது நெருங்கிய நண்பர். அவரது நல்ல மனதால் இந்தளவுக்கு உயர்ந்திருக்கிறார். திரையுலகில் பல பேர் வருவார்கள், போவார்கள். ஆனால், சிவகார்த்திகேயன் மட்டும் நிலையாக இருப்பார். 50 கோடி, 100 கோடி, 300 கோடி வரை வந்துவிட்டார். அவர் ஜெயிக்கும் போது எல்லாம் பெருமையாக இருக்கும். ’மதராஸி’ ட்ரெய்லரின் இறுதியில் ‘இது என் ஊரு சார். நான் வந்து நிற்பேன்’ என்று ஒரு வசனம் இருக்கும். அதே போல் தான் இது என் எஸ்.கே. நான் வந்து நிற்பேன்.
எங்கள் இருவருடைய நட்பு ‘எதிர் நீச்சல்’ படத்திலிருந்து தொடங்கியது. ஒரு நாள் நானும் திரையுலகில் இருந்து காணாமல் போகலாம். அப்போது சிவகார்த்திகேயன் ஜெயித்தால் நான் ஜெயித்தது போன்று உணர்வேன். ‘மதராஸி’ படத்தில் புதுவிதமான சிவகார்த்திகேயனை காண உள்ளீர்கள். ரஜினி சார் ஒரு இசை வெளியீட்டு விழாவில், “நான் யானை இல்ல. குதிரை. விழுந்த உடனே சட்டென்று எழுந்துவிடுவேன்” என்று பேசியிருப்பார். அதே போல் தான் ஏ.ஆர்.முருகதாஸ் சார். சீக்கிரமே எழுந்துவிடுவார்” என்று பேசினார் அனிருத்.