அந்த ஈரம் இப்போதும் அப்படியே மனதில் இருப்பதாக கலைமாமணி விருது வென்று குறித்து லிங்குசாமி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசு சார்பில் 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. அதில் 2021-ம் ஆண்டுக்கான இயக்குநருக்கான கலைமாமணி விருது பெறவுள்ளார் லிங்குசாமி. இந்த விருது வென்றது குறித்து லிங்குசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் லிங்குசாமி, “தமிழக அரசு சார்பில் எனக்கு கலைமாமணி விருது அறிவித்திருக்கிறார்கள். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. முன்பு முரசொலியில் கலைஞர், கலைமாமணி விருது குறித்து கூறும்போது “தமிழக அரசின் சார்பாக வழங்கப்படும் இந்த விருதை ஒரு அன்னையின் முத்தம் போல நினைத்து ஏற்றுக்கொள்ள வேண்டும்” என கட்டுரை எழுதி இருப்பார். அந்த ஈரம் எனக்கு இப்போதும் அப்படியே மனதில் இருக்கிறது.
இதுவரை என்னுடன் பயணித்த, பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும், என்னுடைய நண்பர்களுக்கும், என்னுடைய குடும்பம், குறிப்பாக என்னுடைய தம்பி போஸ், சிறு விஷயத்தைக்கூட ஊரிலிருந்து உற்சாகமாக போன் செய்து சொல்கின்ற எனது பெரிய அண்ணன், அம்மா, மனைவி என எல்லோருக்கும் இதில் பங்கு இருக்கிறது.
உலகம் முழுவதும் இருக்கின்ற என்னுடைய முக்கியமான நண்பர்கள் என்னை தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். சந்தோஷமாக இருக்கிறது. அவர்களது சந்தோஷத்தை பார்க்கும்போது தான், இன்னும் கொஞ்சம் கூட வேலை செய்யணும், நான் போய் சேர வேண்டிய இடம் இன்னும் நிறைய இருக்கிறது என்று தோன்றுகிறது.
நான் எப்போதும் வணங்குகின்ற என்னுடைய குருநாதர்கள், இப்போது என்னுடைய குருவாக இருக்கும் மாஸ்டர் தாஜி உள்ளிட்ட எல்லோருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு முதல் பட வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மூலமாகத்தான் என் பயணத்தை தொடங்கினேன். அவருக்கும் இந்த நேரத்தில் நன்றி செலுத்திக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் லிங்குசாமி.