அதிமுக ஆட்சியில் கூட ரெட் ஜெயண்ட் படம் தயாரிக்கவில்லையா என்ன என்று போஸ்ட் வெங்கட் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் உருவாகியுள்ள படம் ‘இரவின் விழிகள்’. சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளர் மகேந்திரா, சிக்கல் ராஜேஷ், நீமா ரே, நிழல்கள் ரவி, அஸ்மிதா, கும்தாஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, மு.களஞ்சியம், போஸ் வெங்கட், நடிகை நமீதாவின் கணவர் வீரா, நடிகை கோமல் சர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் போஸ்ட் வெங்கட் பேசும் போது, “’இரவின் விழிகள்’ படம் ’ஊமை விழிகள்’ படம் போல வெற்றியடைய வேண்டும். அண்ணன் இயக்குநர் ஆர்.வி உதயகுமார், பட ரிலீஸ் பற்றி பேசினார். ரிலீஸ் என்று சொன்னதுமே எல்லோரும் டக்கென திமுக பக்கம் தான் பார்வையைத் திருப்புவார்கள். ஒருவேளை ரெட் ஜெயன்ட் பற்றி அவர்கள் சொன்னார்கள் என்றால் அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் ரெட் ஜெயண்ட் படம் தயாரிக்கவில்லையா என்ன?
என்னுடைய படம் வெளியான போது முதல் வாரம் 200 தியேட்டர்களுக்கு மேல் இருந்தது. அடுத்த வாரம் 150 தியேட்டர், ஆனால் மூன்றாவது வாரம் பல தியேட்டர்களில் என் படம் இல்லை. 25 நாள் அல்லது 50 நாள் போஸ்டர் ஒட்டுவதற்காக ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று திரையரங்கு உரிமையாளர்களிடம் கேட்டேன். அந்த வகையில் இப்போது ஒரு படத்தின் ஆயுள் காலம் 10 லிருந்து 20 நாள் என மாறிவிட்டது. அதன் பிறகு ஓடிடி வந்து விட்டது.
சின்ன தயாரிப்பாளர்கள் தயவு செய்து படம் எடுக்க வரவேண்டாம் என விஷால் சொன்னபோது நான் தான் முதல் கண்டனக் குரல் கொடுத்தேன். ஆனால் அவர் என்ன அர்த்தத்தில் சொல்லி இருக்கிறார் என்றால் கொஞ்சம் உஷாராக இருங்கள் என்று தான் சொல்லியிருக்கிறார். அதை அவர் சொல்லத் தெரியாமல் சொல்லிவிட்டார். அதனால் சில தயாரிப்பாளர்கள் ஓடியே விட்டார்கள் என்பதையும் மறுக்க முடியாது.
ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவதற்கான வாய்ப்பை நாம் உருவாக்கித் தராதது நம் மீது உள்ள தவறுதான். அவர்கள் உள்ளே வருவதற்கு முக்கியமான ஒரு பாயிண்ட் இருக்க வேண்டும். ஜாதி படமாக இருந்தால் கூட அதை பார்ப்பதற்கான ஒரு கூட்டம் வருகிறார்கள். விருதுகளுக்கான படங்கள் எடுப்பது வேறு, ஸ்டார் படங்கள் என்பது வேறு. ஆனால் மற்ற படங்களுக்கு தியேட்டர்களையோ விநியோகஸ்தர்களையோ ரசிகர்களையோ குறை சொல்லவே முடியாது. ஏற்கனவே ரிலீஸ் தேதியை திட்டமிட்டு விட்டு பெரிய படங்கள் வருகிறது என்பதால், நீங்கள் ஏன் பின்வாங்குகிறீர்கள்? பெரிய படம் தோற்றது இல்லையா ? பல நேரங்களில் பெரிய படம் தான் தோற்கிறது. ஏன் விட்டுக் கொடுக்கிறீர்கள் ? போராட வேண்டும்.
நீங்கள் விலகும் போது அவர்களுக்கு விளையாடுவதற்கு களம் கிடைக்கிறது. அதிக காட்சிகள் கிடைக்கிறது. உங்கள் வீடு, சொத்தை யார் பெயரிலாவது எழுதி வைப்பீர்களா ? அப்புறம் பல கோடி பணம் போட்டு எடுத்த படத்தை மட்டும் யாரோ ஒருவரிடம் எப்படி கொடுக்கிறீர்கள் ? சொந்தமாக ஏன் ரிலீஸ் செய்யத் தயங்குகிறீர்கள் ? அப்படி என்றால் வியாபாரம் கற்றுக் கொள்ளாமல் உள்ளே வந்திருக்கிறீர்கள். வியாபாரத்தை தெரிந்து கொண்டு வாருங்கள். அப்படி இல்லாமல் தோற்றுப் போய் விட்டேன் என்று அழுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.
எனக்கு இப்போது டிஸ்ட்ரிபியூஷன் கற்றுக்கொள்ள ஆசையாக இருக்கிறது. விரைவில் அதில் இறங்கப் போகிறேன். அங்கே தான் எல்லா படங்களும் கடைசியாக பிரச்சனையில் வந்து நிற்கிறது. யாரிடமாவது படத்தை ரிலீஸ் செய்யக் கொடுத்துவிட்டு ஏன் கெஞ்ச வேண்டும்? இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்களே தங்கள் படங்களை சொந்தமாக ரிலீஸ் செய்ய வேண்டும், யார் பின்னாடியும் போக வேண்டாம்” என்று பேசினார் போஸ்ட் வெங்கட்.