‘காடன்’ படத்துக்குப் பின் பிரபு சாலமனிடம் பேசவில்லை என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
தனது தம்பி ருத்ராவை ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகப்படுத்த உள்ளார் விஷ்ணு விஷால். இதனை அவரே தயாரித்து கவுரவ கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இப்படத்தை பல்வேறு வழிகளில் விளம்பரப்படுத்து வருகிறது படக்குழு. இதற்காக அளித்த பேட்டி ஒன்றில் ‘காடன்’ படம் குறித்து பேசியிருக்கிறார் விஷ்ணு விஷால்.
அதில், “பலரைப் பற்றி என்னால் பேச முடியும். ஆனால், அதனை விரும்பவில்லை. ‘காடன்’ படத்தில் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை இருப்பேன். ராணா தான் இறப்பதாக காட்சி இருந்தது. நான் தான் கடைசியில் காட்டை பாதுகாப்பவனாக இருந்தேன். ஆனால், பட வெளியீட்டுக்கு 5 நாட்களுக்கு முன்பு இடைவேளை உடன் எனது காட்சிகள் முடிந்துவிட்டதை அறிந்தேன்.
‘ராட்சசன்’ படத்தின் வெற்றிக்குப் பின், ‘காடன்’ படத்துக்கான பேட்டிகள் அளித்துக் கொண்டிருக்கும்போது இது தெரிய வருகிறது. அப்படியிருந்தும் 5 நாட்கள் முழுமையாக பேட்டிகள் அனைத்தும் முடித்துவிட்டுதான் வந்தேன். அதற்கு பின் பிரபு சாலமன் சாரிடம் இப்போது வரை பேசவில்லை. ஏனென்றால் அவர் இதைப் பற்றி எதையுமே சொல்லவில்லை. வேறொருவர் சொல்லி தெரிந்துகொண்டேன். இந்த மாதிரி வேதனையான விஷயங்கள் நிறைய நடந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால்.