‘ஜனநாயகன்’ முடித்துவிட்டு தனுஷ் நடிக்கும் படத்தினைத் தொடங்க ஹெச்.வினோத் முடிவு செய்திருக்கிறார்.
‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து ஹெச்.வினோத்தின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. தற்போது அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தினை இயக்க முடிவு செய்திருக்கிறார் ஹெச்.வினோத். இதனை லலித் குமார் தயாரிக்கவுள்ளார். இப்படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார்.
முன்னதாக, ‘ஜனநாயகன்’ படத்துக்கு முன்பு தனுஷ் படத்தை இயக்குவதாக இருந்தார் ஹெச்.வினோத். ஆனால், அவர் கூறிய கதை விஜய்க்கு பிடித்துவிடவே, அவருக்காக விட்டுக் கொடுத்தார் தனுஷ். தற்போது விஜய் படத்தினை முடித்துவிட்டதால் தனுஷ் படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார் ஹெச்.வினோத். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.
ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, கவுதம் மேனன், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.