அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல பாடகர் ஜூபின் கார்க் (வயது 52). இவர் அசாம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழில், ‘குத்து’ படத்தில் வரும், ‘அசானா அசானா’, ‘உற்சாகம்’ படத்தில், ‘கண்கள் என் கண்களோ’ உள்பட சில பாடல்களை பாடியுள்ளார்.
இவர், சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த ‘வடகிழக்கு விழா’வுக்காக இசை நிகழ்ச்சி நடத்த சென்றிருந்தார். அப்போது பல்வேறு சாகச நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஆழ்கடலில் நடத்தப்படும் ஸ்கூபா டைவிங் சாகசத்திலும் ஈடுபட்டார். அப்போது ஜூபின் கார்க்குக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
ஜுபின் கார்க்கின் திடீர் மறைவு அசாம் மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மறைவுக்கு அசாம் மாநில அரசு, 3 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அம்மாநில தலைநகர் கவுகாத்தியில் கடைகள் அடைக்கப்பட்டன. அவர் உடல் அசாம் கொண்டு வரப்படுகிறது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வரும் அசாம் போலீஸார், நிகழ்ச்சி ஏற்பட்டாளர் ஷியாம் கனு மஹந்தா, ஜுபின் கார்க்கின் மேலாளர் சித்தார்த்த சர்மா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.