சென்னை: முதல்வர் ஸ்டாலினை ‘அங்கிள்’ என்று விஜய் கூறியது தப்பான வார்த்தை கிடையாது என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “விஜய் பேசியது எனக்கு தவறாகப் படவில்லை. ஏனெனில் அவர் நேரில் பார்க்கும்போது கூட “குட்மார்னிங் அங்கிள், வணக்கம் அங்கிள், எப்படி இருக்கீங்க அங்கிள்?” என்று தான் சொல்வார். அதை இன்று பொதுவெளியில் சொல்லி இருக்கிறார். அதற்கு வேறு ஒரு அர்த்தம் கற்பித்து ஒரு தரப்பு வேறு மாதிரி பேசிக் கொண்டிருக்கிறது.
நானே ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கு இரண்டு படங்கள் செய்திருக்கிறேன். முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு நிறைய முறை போயிருக்கிறேன். பலமுறை அவரை சந்தித்திருக்கிறேன். நானும் அவரிடம் ‘வணக்கம் அங்கிள்’ என்றுதான் சொல்வேன். அது தப்பான வார்த்தை கிடையாது. அதுமட்டுமின்றி அங்கு இருந்தது அனைத்துமே அவருடைய கூட்டம். அவர்களை மகிழ்விக்க விஜய் அப்படி பேசியிருக்கலாம். அப்படித்தான் நான் நினைக்கிறேன்” இவ்வாறு கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் கடந்த 21-ம் தேதி நடந்தது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய்யை பார்க்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரை வந்தனர். இதில் பேசிய விஜய் ‘ஸ்டாலின் அங்கிள் இட்ஸ் வெரி ராங் அங்கிள்’ என்று பேசியது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுகவினர் பலரும் விஜய்யை கடுமையாக விமர்சித்து வந்தனர்.